சென்னை உட்பட 7 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்குக் கனமழை நீடிக்க வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் சில நாட்களாகவே பரவலாக மழை பொழிந்துவரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிவாரணப் பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், அடுத்த இரண்டு மணி நேரத்திற்குச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பொழியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக அம்மப்பள்ளி அணையிலிருந்து 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கொற்றலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் நான்கு தரைப்பாலங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ள நிலையில், கீழ்கல்பட்டறை, சரக்காப்பேட்டை, நெடியம், தானாகுப்பம், நெமிலி உள்ளிட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையைத் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.