சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''ஈரப் பதத்துடன் கூடிய கிழக்கு திசைக் காற்று வங்கக் கடல் மற்றும் தென்னிந்தியப் பகுதிகளில் நிலவி வரும் சூழ்நிலையில், வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் புதுவை, காரைக்கால் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் 29/10/2022 முதல் துவங்கி உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 20 மாவட்டங்களில் இன்று 30/10/2022) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி திருவாரூர், நாகை, தஞ்சை, மயிலாடுதுறை, மதுரை, புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதேபோல் மூன்று மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும். சென்னை, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது. நவம்பர் 1-ல் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.