ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மலைப் பகுதியில் தமிழக, கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கியப் பாதையான திம்பம் மலைப்பாதை உள்ளது. அதில், 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த வழியாகத்தான் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் கடந்துசெல்லும். 6 சக்கரங்கள் மற்றும் 16 டன் எடையளவு கொண்ட லாரிகள் மட்டுமே செல்லவதற்கு இங்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாகச் செல்லும்போது பண்ணாரியில் உள்ள போக்குவரத்து, வனத்துறை மற்றும் காவல்துறையின் மூன்று சோதனைச் சாவடிகளில் பணியில் உள்ள ஊழியர்கள், அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு, கூடுதலாகப் பாரம் ஏற்றிவரும் லாரிகளை திம்பம் மலைப்பாதையில் அனுமதிப்பதால்தான் இங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு மொத்தமாகப் போக்குவரத்து முடங்குவதாக அப்பகுதி மக்களால் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்தப் போக்குவரத்துத் தடையால் ஆசனூர், தாளவாடி, சாம்ராஜ்நகர் செல்வோர் புலிகள் வாழும் வனப்பகுதியில் அச்சத்துடன் நீண்டநேரம் தவிக்க நேரிடுகிறது. அதேபோல இம்மலைப் பகுதிகளில் விளையும் பல டன் காய்கறிகளை உரியநேரத்திற்குள் அனுப்ப முடியாமல் அவை வீணாவதாகவும் மலைவாழ் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். வாகனங்களை எடை தணிக்கை செய்ய வனப்பகுதியை ஒட்டியுள்ள புதுவடவள்ளி மற்றும் ஆசனூரில் அமைக்கப்பட்ட எடைமேடை நிலையங்கள் வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளது என்றும் தெரிவிக்கின்றனர்.
அதிக பாரத்துடன் செல்லும் இத்தகைய வாகனங்களால் குறைந்தது 5 மணி நேரம் முதல் 12 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். இதற்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளதோடு தங்களது கோரிக்கைகளை உடனடியாகப் பரிசீலனை செய்யாவிட்டால் பண்ணாரி சோதனைச் சாவடியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவதோடு அதிக பாரம் ஏற்றிவரும் லாரிகளை சிறைப்பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தையும் நடத்தப்போவதாக தாளவாடியில் உள்ள மலைக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.