Skip to main content

“ வெப்பச் செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்” - தமிழக முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

Published on 01/06/2024 | Edited on 01/06/2024
Anbumani Ramadoss's letter to the Chief Minister of Tamil Nadu We need to create a heat action plan in Tamil Nadu

சென்னை துணை நகரங்கள் மற்றும் 25 மாநகராட்சிகளில் வெப்பச் செயல் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, “கடந்த 2001 & 2010 மற்றும் 2014 & 2023 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட பத்தாண்டு காலத்தில், சென்னை மாநகரின் வெப்பநிலை 0.4 டிகிரி செல்சியஸ் அளவும், ஈரப்பதம் 5% அளவும், ஆபத்தான வெப்ப நாட்கள் எண்ணிக்கை 3 மடங்கும் அதிகரித்துள்ளதாக, புதுதில்லியில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் கடந்த வாரத்தில் வெளியிட்ட Decoding the Urban Heat Stress among Indian Cities ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் 2014 & 2023 காலத்தில் மார்ச் & ஏப்ரல் சராசரி வெப்பநிலையை விட, 2024 மார்ச் & ஏப்ரல் வெப்ப நிலை 1 டிகிரி செல்சியஸ் அதிகம் என இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது ஒரு ஆபத்தான போக்கு ஆகும்.

காலநிலை மாற்றத்தின் காரணமாக தமிழ்நாட்டில் வெப்பநிலை ஆண்டுக்காண்டு அதிகரித்துச் செல்கிறது. வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படும் 23 இந்திய மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக நகரங்களில் இனிவரும் ஆண்டுகளில் வெப்ப அலை தாக்கம் இருமடங்காக அதிகரிக்கும் என 2024 மார்ச் மாதம் அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்ட காலநிலை இடர் மதிப்பீட்டு வரைவு அறிக்கை எச்சரித்துள்ளது. இதனை எதிர்கொள்வதற்காக வெப்பச் செயல்திட்டங்கள்  தமிழ்நாட்டு அளவிலும் நகரங்களுக்காகவும் உருவாக்கப்பட வேண்டும். 

இன்றைய உலக மக்கள் அனைவரையும் பாதிக்கும் தலையாய சிக்கல் காலநிலை மாற்றமே ஆகும். வளிமண்டலத்தில் கலக்கவிடப்படும் கரியமிலவாயு அதிகரித்துச் செல்கிறது. கூடவே, புவியின் மேற்பரப்பு வெப்பநிலையும் கடல் வெப்பநிலையும் அதிகரித்துச் செல்கிறது. கடந்த 150 ஆண்டுகளில், பூமியின் சராசரி வெப்பநிலை 1.2 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. இது மேலும் அதிகரித்து 1.5 டிகிரி செல்சியஸ் அளவை மிக விரைவில் எட்டிவிடும். ஒவ்வொரு 0.1 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை அதிகமாக்கக் கூடியதாகும். இனிவரும் ஆண்டுகளில் வெப்ப இடர்கள் அதிகரித்துக் கொண்டே செல்லும். தமிழ்நாட்டிற்கான வெப்ப அலை செயல்திட்டம் 2019ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அது போதுமானதாகவும் இல்லை. முறையாகச் செயலாக்கப்படவும் இல்லை. இந்நிலையில், தமிழ்நாட்டிற்கான புதிய வெப்ப செயல்திட்ட வரைவு அறிக்கையை 2023ஆம் ஆண்டில் மாநிலத் திட்டக் குழு தமிழ்நாடு அரசுக்கு அளித்தது. ஆனால், அதனை தமிழ்நாடு அரசு இன்னும் வெளியிடவில்லை.

அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மையம் 2024 மார்ச் மாதம் வெளியிட்டுள்ள ‘தமிழ்நாட்டின் காலநிலை இடர் மதிப்பீடு மற்றும் தகவமைப்புத் திட்டம் என்ற வரைவு அறிக்கையின்படி, தமிழகத்தில் வெப்பநிலை இனி மென்மேலும் அதிகரிக்கும், நகர்ப்புறங்களில் அதிக பாதிப்பு இருக்கும் எனத் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் 1985 & 2014 ஆண்டுகளுக்கு இடையே ஆண்டு சராசரியாக சென்னையில் 42 நாட்கள், சேலத்தில் 32 நாட்கள், வேலூரில் 43 நாட்கள், கடலூரில் 26 நாட்கள், காஞ்சிபுரத்தில் 39 நாட்கள் வெப்ப அலை வீசியது. இனி 2021 & 2050 ஆண்டுகளுக்கு இடையே சென்னையில் 81 நாட்கள், சேலத்தில் 54 நாட்கள், வேலூரில் 73 நாட்கள், கடலூரில் 52 நாட்கள், காஞ்சிபுரத்தில் 74 நாட்கள் வெப்ப அலை வீசக்கூடும். 

அதாவது, தமிழ்நாட்டின் நகரங்களில் வெப்ப அலை தாக்கும் நாட்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கக் கூடும். மேலும், தமிழ்நாட்டில் ஒரு ஆண்டில் சுமார் 250 நாட்கள் வரை அதிக வெப்பத்தால் அசௌகரிய நிலை ஏற்படும் என அண்ணா பல்கலைக்கழக அறிக்கை கூறுகிறது. எனவே, நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் தமிழக நகரங்களை வாழத்தகுந்தவையாக மாற்ற, வெப்ப செயல்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும். இதற்காக தமிழக நகரங்களுக்கான வரைவு வெப்பச் செயல்திட்டம் எனும் அறிக்கையை பசுமைத் தாயகம் அமைப்பு வெளியிடுகிறது. இதில் கூறப்பட்டுள்ள வழிகாட்டுதல்களைப் பரிசீலித்து, பரந்துபட்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டு, மக்களின் கருத்துக்களைக் கேட்டு, தமிழ்நாட்டிற்கு உகந்த ஒரு பொதுவான செயல்திட்டத்தையும், ஒவ்வொரு நகரத்திற்கும் ஏற்ப தனிப்பட்ட செயல்திட்டங்களையும் தமிழ்நாடு அரசு உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும். 

அதே போன்று தமிழ்நாட்டின் கிராமப்பகுதிகள், மாவட்டங்கள், வேளாண்மை உள்ளிட்ட தேவைகளுக்கு ஏற்ற வெப்பச் செயல்திட்டங்களையும் உருவாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். குறிப்பாக, தமிழ்நாட்டின் 25 மாநகராட்சிகளுக்கான வெப்பச் செயல்திட்டங்களை உடனடியாக உருவாக்க வேண்டும். மேலும், சென்னையின் செயற்கைக்கோள் நகரங்களாக மேம்படுத்தப்படவுள்ள காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் மீஞ்சூர், திருமழிசை, செங்கல்பட்டு, மாமல்லபுரம், திருவள்ளூர் ஆகிய நகரப் பகுதிகளுக்கான வெப்பச் செயல்திட்டங்களை உடனடியாக உருவாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்