கள்ளக்குறிச்சி நகர் காந்தி சாலையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய ஏரியில் இருந்து, காந்திரோடு வழியாக தென்கீரனூர் ஏரிக்கு தண்ணீர் செல்லும் வகையில் பாசன வாய்க்கால் உள்ளது. இந்த கால்வாயை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. கடந்த 2020ம் ஆண்டு ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அப்போது, ஆக்கிரமிப்பு அகற்ற தடை விதிக்க சிலர் வழக்கு தொடர்ந்தனர். இடைக்கால தடை விதிக்கப்பட்டதால் இடிப்பதை அதிகாரிகள் நிறுத்தினர்.
இந்நிலையில், ஆக்கிரமிப்பை அகற்ற தடை கோரிய வழக்கினை தள்ளுபடி செய்து, 8 வாரத்திற்குள் வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு நீங்களே ஆக்ரமிப்பை அகற்றிக்கொள்ளுங்கள், நாங்கள் அகற்றினால் அதற்கான செலவுத் தொகையை உங்களிடம் வசூலிப்போம் என நீர்வளத்துறை சார்பில் கடந்த மே 16ம் தேதி நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து, ஆக்கிரமிப்பாளர்கள் சிலர், தாமாகவே கட்டடங்களை இடித்து அகற்றி வருகின்றனர்.
அகற்றாத கட்டங்களை கடந்த 28ம் தேதி பொதுப்பணித்துறை சார்பில் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. மேலும் காந்தி சாலையில் உள்ள சக்தி விநாயகர் கோவில் மற்றும் தர்ம சாஸ்தா கோவிலை அகற்றுவது தொடர்பாக நேற்று கோவிலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஜீன் 1 ஆம் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள பாசன அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் கோவில்களை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவில் அகற்றுவது தொடர்பாக முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என கூறி கோவில் நிர்வாகத்தினர் திமுக அரசை கண்டித்து கோஷம் எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
அதன் பிறகு கோவிலில் உள்ள சிலைகளை நகராட்சி பணியாளர்கள் உதவியுடன் அகற்றம் செய்யப்பட்டு பழைய மாரியம்மன் கோவிலில் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டு கோவில்களும் இடிக்கப்பட்டது.