கடந்த மாதம் 25-10-2022 அன்று சென்னை பெரியார் திடலில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில், ”சூரிய கிரகணம் குறித்த மூடநம்பிக்கை முறியடிப்பு” நிகழ்ச்சி மாலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அ.அருள்மொழி, பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு உணவு உண்டனர்.
இவர்களோடு கருவுற்றிருந்த திராவிடர் கழகத் தோழர்கள் எழிலரசி, சத்யா இருவரும் கலந்து கொண்டு அனைவரோடும் சேர்ந்து உணவு உண்டு காட்டினர். நிகழ்ச்சி இனிதே முடிந்த பிறகு, இதில் கலந்து கொண்ட கருவுற்ற இரண்டு பெண்களில் ஒருவர் வீட்டுக்குச் செல்லும் வழியில் மயங்கி விழுந்தார் என்றும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அவர் இறந்தார் என்றும் நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டதென்றும் சமூக ஊடகங்களில் வதந்தி பரவியது.
அடுத்த நாளே சம்பந்தப்பட்ட கருவுற்ற பெண்கள் இருவரும் அதைக் கண்டித்தும், வதந்தியை நம்ப வேண்டாம் என்றும் பேசி, பெரியார் வலைக்காட்சி வாயிலாக ஒரு காணொலியை வெளியிட்டனர். அந்த இருவரில் ஒருவரான எழிலரசிக்கு நேற்று (17.11.2022) மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக இருக்கின்றனர் என்று எழிலரசியின் தந்தை பட்டாளம் பன்னீர்செல்வம் ‘விடுதலை' நாளிதழுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
எழிலரசி சூரிய கிரகணம் அன்று "கர்ப்பிணிப் பெண்கள் உணவு உண்ணக் கூடாது, வெளியில் வரக்கூடாது என்ற மூடநம்பிக்கையைப் பரப்பி மற்ற கருவுற்ற பெண்களுக்கும் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வச்சிருக்காங்க. அதெல்லாம் பொய் என்று நிரூபிக்கவும், ஒரு எடுத்துக்காட்டாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக நான் இன்று உணவு உண்டேன். மருத்துவர்கள் எனக்கு அடுத்த மாதம் தேதி கொடுத்திருக்கிறார்கள். குழந்தை பிறந்ததும் பத்திரிகைகாரர்களுக்குத் தகவல் கொடுக்கிறேன்" என்று கடந்த மாதம் நடந்த நிகழ்வில் பத்திரிகையாளர்களிடம் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரியார் பெருந்தொண்டர் கோ.சொக்கலிங்கம் - ராதா ஆகியோரின் மகள் கலைச்செல்வி என்பதும், பட்டாளம் பன்னீர்செல்வம் மகள் எழிலரசி என்பதும் மேலும் இவர்களின் திருமணம் ஆடி மாதத்தில் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.