மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் குப்பைகளை தரம் பிரித்து எடுக்கும் பணிகளுக்காக 105 குப்பை தரம் பிரிப்பு வாகனங்கள் செயல்பட்டுவருகின்றது. இதற்கான ஓட்டுனர்கள் ஒப்பந்த பணியாளர்களாக நியமிக்கப்பட்ட நிலையில் ராம்&கோ என்ற ஒப்பந்ததாரர் ஓட்டுனர்களுக்கான 14 ஆயிரம் ஊதியத்தை வழங்காமல் 10 ஆயிரம் மட்டுமே வழங்குவதாக கூறியும் மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் ஓட்டுனர்கள் மற்றும் பொறியியல் பிரிவு பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு வருகை பதிவேடு முறையை பின்பற்ற வேண்டும், ஊதியத்தை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் குப்பை தரம் பிரிக்கும் வாகன ஓட்டுனர்கள் தங்களது வாகனங்களை மாநகராட்சி அலுவலகத்தில் நிறுத்தி தரயில் அமர்ந்து பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாநகராட்சி தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் போராட்டத்தை முடித்து புறப்பட்டனர். குப்பை அள்ளும் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் மாநகராட்சி பகுதிகளில் குப்பைகளை எடுக்காமல் ஆங்காங்கே தேங்கி கிடந்தது குறிப்பிடதக்கது.
போராட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த தொழிற்சங்க நிர்வாகி பேசுகையில்; எங்களது கோரிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் நிறைவேற்றுவதாக கூறியுள்ளது. இந்த கோரிக்கைகள் தொடர்பாக ஏற்கனவே மாநகராட்சியிடம் கூறிய நிலையில் அலட்சியமாக இருந்ததன் விளைவாக இது போன்ற போராட்டம் நடந்துள்ளது என்றார். மேலும் மாநகராட்சி ஒப்பந்த பணிகளில் பல்வேறு முறைகேடுகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.