ப்ளீச்சிங் பவுடரை சாப்பிட்டு உடல்நலம் குன்றிய சிறுமி இசக்கியம்மாள், உடல்நலம் தேறிவருவதாக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டை நகரில் மேலூர் வாட்டர் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த சீதாராஜ் - பிரேமா தம்பதியினருக்கு தனம் (12), இசக்கியம்மாள் (5) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
5 வயது சிறுமியான இசக்கியம்மாள் அக்கம்பக்கத்து குழந்தைகளுடன் விளையாடுவது வழக்கம். அந்தவகையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சிறுமி இசக்கியம்மாள், பக்கத்து வீட்டில் வாசிங் மெஷின் மீது அதனை சுத்தம் செய்ய வைத்திருந்த கிளீனிங் பவுடரைத் திண்பண்டம் என்று நினைத்துச் சாப்பிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, மறுநிமிடம் சிறுமியால் உணவு தண்ணீர் சாப்பிட முடியாமல் வயிறு வலி மற்றும் எரிச்சலால் துடித்திருக்கிறார். வேலையிலிருந்து வீடு திரும்பிய அவளது பெற்றோர்கள், அவள் படும் வேதனையைக் கண்டு பதறியபடி சிறுமியை தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு ஆரம்பகட்ட சிகிச்சை செய்த மருத்துவர்கள், பின்னர் அவரை பாளை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு அவளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின் சிறுமி ஓரளவு குணமடைந்ததாகத் தெரிவித்து, கடந்த மாதம் அவளை வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.
ஆனால், சிறுமியால் கடந்த ஒரு மாதமாக உணவு ஏதும் சாப்பிட முடியாமல் எடை குறைந்து எலும்பும் தோலுமாய், உடல் மெலிந்து காணப்பட்டாள். அதையடுத்து பல்வேறு கட்ட சிகிச்சைகள் பலனளிக்காததால், அரசு சார்பில் சென்னை கொண்டு செல்லப்பட்டு அரசு சார்பில் சிறப்பு கவனிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில், இன்று (24.07.2021) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “ப்ளீச்சிங் பவுடர் சாப்பிட்டு உடல்நலம் குன்றிய சிறுமி இசக்கியம்மாள் உடல்நலம் தேறிவருகிறார். சிகிச்சைக்குப் பின் அவரது உடல் எடை 2 கிலோ கூடியுள்ளது. உணவுகூட உட்கொள்ள முடியாத நிலையில் எழும்பூர் மருத்துவமனைக்கு 6 கிலோ எடையுடன் வந்த சிறுமியின் எடை 8 கிலோவாக உயர்ந்துள்ளது ” என தெரிவித்துள்ளார்.