சிட்லிங் மலைக் கிராமப் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் வருவதே இல்லை எனப் புகார் எழுந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை சார்பில் குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது.
தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே 44க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களை உள்ளடக்கிய சிட்லிங் கிராம ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் சுமார் 12 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மக்களின் பிரதான வாழ்வாதாரமாக விவசாயமும், விவசாய கூலித் தொழிலாகவும் உள்ளது. உடல் நலம் சரியில்லாமல் போனாலும், கர்ப்பிணி பெண்கள் பிரசவ காலங்களிலும் நீண்ட தொலைவு செல்லவேண்டிய நிலை இருந்ததாலும், சிட்லிங் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்பட்டது. மலைவாழ் கிராமப்புற கர்ப்பிணி பெண்களுக்கு பிரவசம் பார்க்கும் சேவையையும் இந்த மருத்துவமனை வழங்கி வந்தது.
ஆனால், காலப்போக்கில் படிப்படியாக இந்த மருத்துவமனையில் பிரசவம் பார்க்கும் பெண்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், மருத்துமனைக்கு இரண்டு மருத்துவர்கள் உள்ளனர். ஆனால், யாரும் வருவதில்லை. பணியாளர் பற்றாக்குறை, ஜெனரேட்டர் வசதியின்மை என மருத்துவமனை இயங்குகிறது.
2020-21-ம் ஆண்டில் சிட்லிங் ஊராட்சி பகுதியில் கருவுற்ற பெண்களின் எண்ணிக்கை 132. அதில் 14 பெண்கள் மட்டுமே சிட்லிங் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் பார்த்துக் கொண்டவர்கள். மீதமுள்ளவர்கள் தனியார் மருத்துவமனைக்கு சென்றும் பார்த்து வந்துள்ளனர். இதனால் அரசின் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்ட பயன்களையும் அவர்களால் அடைய முடிவதில்லை எனக் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தமிழக சுகாதாரத்துறை உத்தரவின் பேரில், சிட்லிங் கிராமத்தில் ஆய்வு மேற்கொள்ள மருத்துவர் சித்ரா தலைமையில் கிருஷ்ண லீலா, சாந்தி ரத்னா குமார், சித்ர சேனா உள்ளிட்ட மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் சிட்லிங் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். 3 வருடமாக வராத மருத்துவர்கள், ஆய்வுக்குழுவினர் வந்த அன்று மருத்துவமனைக்கு வந்து பணியைத் தொடங்கினர். நிச்சயம் நமக்கு விடிவுக்காலம் என நினைத்த சந்தோசத்தில் இருந்த மக்களுக்கு சில மணி நேரத்தில் அந்த நம்பிக்கையும் போய்விட்டது.
சமூக ஆர்வலர் ஒருவரின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்ள வந்த சுகாதாரத்துறையின் ஆய்வுக் குழு மலைவாழ் மக்களிடம் குறைகளைக் கேட்காமல் வட்டார மருத்துவ அலுவலர், மாவட்ட துணை இயக்குநர், மருத்துவமனையில் பணியாற்றக்கூடிய மருத்துவ பணியாளர்களிடம் மட்டுமே குறைகளைக் கேட்டுவிட்டுச் சென்றுள்ளனர். சுகாதார குழுவிடம் குறைகள் குறித்து சொல்ல வந்த அப்பகுதி மக்களின் கோரிக்கையை கேட்காமல் அக்குழு அங்கிருந்து விரைந்து கிளம்பியுள்ளது. இது மலைவாழ் பழங்குடியினர் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு மலைவாழ் மற்றும் ஆதிதிராவிடர், அருந்ததியர் மக்கள் நலன் கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் கூட உள்ளூர் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குவதால் பெரும்பான்மையான மலைவாழ் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படுவதாகவும் மத்திய மாநில அரசுகள் தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.