திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தனியார் விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியில் கேரளாவைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவியர்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். இந்நிலையில் இந்த மாணவர்கள் நேற்று (12.11.2024) இரவு உணவு வழக்கம்போல் உணவு உண்டனர். அதன் பின்னர் இன்று (13.11.2024) காலை 60க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு மற்றும் தலைச் சுற்றல் போன்ற உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவ மாணவியர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஒரே நேரத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிகிச்சை பெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து சுகாதாரத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த பொது மருத்துவ சுகாதாரத் துறையினர் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் உள்ள உணவு தயாரிக்கும் இடத்திற்குச் சென்று ஆய்வு செய்து மாணவ மாணவியர்களிடமும் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையைத் தொடர்ந்து, உணவினால் தான் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டது எனத் தெரியவந்தால் விடுதியின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.