தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் விண்ணப்பம் பெறப்பட்டு கலந்தாய்வுகள் நடந்து வருகிறது.
இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் காசிம்புதுப்பேட்டை மற்றும் ஆயிங்குடி வடக்கு ஆகிய இரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் உள்பட இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் பணி மாறுதல் ஆணை பெற்று வெவ்வேறு பள்ளிகளுக்கு சென்றுவிட்டதால் தற்போது அந்தப் பள்ளிகளுக்கு வேறு ஆசிரியர்கள் வராததால் தற்காலிகமாக மாற்றுப் பணியிலும் தற்காலிக ஆசிரியர்களையும் வைத்து பள்ளிகள் செயல்படுகிறது. இந்த பள்ளிகள் பற்றிய செய்தி நக்கீரன் இணையத்தில் முதன்முதலில் வெளியானதில் இருந்து இன்று வரை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏராளமான பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது.
இந்நிலையில் தான் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட தளி ஊராட்சியில் உள்ள ஏராளமான தொடக்கப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் அருகில் உள்ள அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களை தலைமை ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளுக்கு தற்காலிகமாக கூடுதல் பொறுப்புகள் வழங்கி தளி வட்டாரக்கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள உத்தரவு பரபரப்பையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
அதாவது தலைமை ஆசிரியர் காலியாக உள்ள பள்ளிகளுக்கு மாணவர்கள் மற்றும் நிர்வாக நலன் கருதி அருகில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியரை நிதி அதிகாரத்துடன் கூடுதல் பொறுப்புகளை தளி வட்டாரக்கல்வி அலுவலர் வழங்கி உத்தரவு அனுப்பி உள்ளார். அதில் தக்கட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டாலின் தக்கட்டி பள்ளியுடன் சேர்த்து சிவபுரம், உடுப்பராணி, அத்திநத்தம் ஆகிய கிராமங்களில் உள்ள (1+3=4) ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் நிதி அதிகாரத்துடன் கூடிய கூடுதல் பொறுப்புத் தலைமை ஆசிரியராக பணி செய்ய அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தனது தலைமை ஆசிரியர் பொறுப்புடன் வகுப்புகளையும் நடத்த வேண்டும். ஆனால் ஒரே தலைமை ஆசிரியர் 4 பள்ளிகளில் எப்படி பாடம் நடத்த முடியும். ஒருவர் மற்றொரு பள்ளிக்கு வேண்டுமானால் கூடுதல் பொறுப்பு பார்க்கலாம் ஆனால் தலைமை ஆசிரியர் ஸ்டாலின் எப்படி 4 பள்ளிகளை கவனிக்க முடியும். ஆடி ஆஃபர் என்பது ஒரு பொருள் வாங்கினால் மற்றொரு பொருள் ஆஃபரில் கொடுப்பது வழக்கம், ஆனால் ஒரு தலைமை ஆசிரியர் கூடுதலாக 3 பள்ளிகளை நிர்வகிப்பார் என்பது ஆடி ஆஃபரிலும் சிறப்பு ஆஃபரா என்ற விமர்சனம் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த ஆடி ஆஃபர் தலைமை ஆசிரியர் கூடுதல் பணி ஆணை சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.