பெங்களூருவிலிருந்து பயணிகளுடன் சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்தும், சென்னையிலிருந்து பயணிகளுடன் பெங்களூரூவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்தும் நேற்று அதிகாலை வாணியம்பாடி பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்த உடனேயே சம்பவ இடத்திற்கு வந்த தலைமைக் காவலர் முரளி விபத்தில் சிக்கியவர்களை விரைந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். இதையடுத்து சீரமைப்புப் பணிகள் முடிந்தவுடன் காவல்நிலையம் சென்ற தலைமைக் காவலர் முரளி, தனக்கு உடல்நிலை சரியில்லை என்று சக காவலரிடம் கூறியுள்ளார்.
அதனால் அவரைக் காவலர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் முரளி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வேலூர் சரக டிஐஜி, திருப்பத்தூர் மாவட்ட எ.ஸ்.பி. ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் வந்து முரளியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.