கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நெய்வேலி பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் பணியில் சேர்வதற்கு நெய்வேலி அருகே உள்ள ஊமங்கலம் காவல் நிலயத்தில் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என விண்ணப்பித்துள்ளார்.
இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் தடையில்லா சான்றிதழ் பெற்று என்எல்சி நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார். இதுகுறித்து புகார் எழுந்த நிலையில் என்எல்சி அதிகாரிகள் அன்பழகன் தடையில்லா சான்று வழங்கிய ஊமங்கலம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர்.
அதைத் தொடர்ந்து ஊமங்கலம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அன்பழகனுக்கு காவல் நிலையத்தில் வழங்கிய தடையில்லா சான்றிதழில் உள்ள கையெழுத்து உதவி ஆய்வாளரின் கையெழுத்து இல்லை என்பது தெரிய வந்தது. இதனத் தொடர்ந்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் உதவி ஆய்வாளரின் கையெழுத்தை காவல்நிலைய தலைமை காவலர் சுதாகர் முறைகேடாக பயன்படுத்தியது தெரியவந்தது. இதேபோன்று அதே காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றிய ஜோசப் என்பவரும் வேறொரு நபருக்கு உதவி ஆய்வாளரின் கையெழுத்தை முறைகேடாக பயன்படுத்தியது தெரியவந்தது.
இந்த முறைகேடுகளை காவல் நிலைய தனி பிரிவு காவலர் சங்கு பாலன் சம்பந்தப்பட்ட கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தெரிவிக்காமல் கடமையிலிருந்து தவறியுள்ளார். இந்நிலையில் குற்றச்செயலில் ஈடுபட்ட 3 பேரை மாவட்ட கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்தார். மேலும் தலைமை காவலர் சுதாகர் மீது வழக்கு பதிவு செய்து ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார். போலி சான்றிதழ்களை பிடித்து தண்டனை பெற்று தரும் காவல்துறையினர் போலி சான்றிதழ் வழங்கிய சம்பவம் காவல்துறையினர் வட்டாரத்தில் மட்டுமல்ல பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.