Skip to main content

''ஐஏஎஸ்' கனவை 'ஐஎஸ்ஐ' முத்திரை போல பதிய வைத்தவர்'' -சிலாகிக்கும் மக்கள் சிந்தனை பேரவை

Published on 01/07/2023 | Edited on 01/07/2023

 

"He who instilled the dream of 'IAS' in the youth like an 'ISI' stamp"-makkal sinthanai Council

 

தமிழகத்தின் தலைமைச் செயலாளராக செயல்பட்டு வந்த இறையன்பு நேற்றுடன் ஓய்வு பெற்றார். அதனையொட்டி தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனாவை தமிழக அரசு நியமித்தது. நேற்று தலைமைச் செயலகத்தில் தனது பொறுப்புகளை சிவ்தாஸ் மீனாவிடம் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது. 1990 ஆம் ஆண்டு பணியைத் துவங்கிய இறையன்பு, தனது 33 ஆண்டுகால பணியினை நேற்றுடன் நிறைவு செய்தார்.

 

இந்நிலையில் ஈரோட்டை சேர்ந்த 'மக்கள் சிந்தனை பேரவை' தலைவர் ஸ்டாலின் குணசேகரன் இறையன்பு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'ஆயிரக்கணக்கான தமிழக இளைஞர்களின் மனதில் 'ஐஏஎஸ்' கனவை 'ஐஎஸ்ஐ' முத்திரை போல பதிய வைத்தவர்' தமிழக மாணவர்கள் பலருக்கு தன்னம்பிக்கையூட்டி அவர்களை 'ஐஏஎஸ்' படிக்க தட்டியெழுப்பியவர். இவரால், இவரது உரைகளால், இவரது எழுத்துக்களால், ஐஏஎஸ் வெற்றி படிக்கட்டுகள் என்ற இவரது ஆழமும், அகலமுமான மிக அற்புத நூலின் தூண்டுதலால், பச்சை தமிழர் பலர் புகழ்மிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக உருவெடுத்தனர். உயர்ந்தனர். 

 

"He who instilled the dream of 'IAS' in the youth like an 'ISI' stamp"-makkal sinthanai Council

 

அடங்காத அறிவுத்தாகம் கொண்ட இவர் ஐஏஎஸ் அதிகாரியாக வந்த பின்னர் மூன்று பிஹெச்டிகளை முடித்தவர். சிறிதும் பெரிதுமாக 100 நூல்களை எழுதி வெளியிட்டவர். சமீபத்தில் வெளியான 'மூளைக்குள் சுற்றுலா' என்ற 625 பக்கங்களை கொண்ட இவரது பெருநூல் ஒரு மணிமகுடம். மக்கள் சிந்தனை பேரவையின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட 125 கல்லூரி மாணவர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கில் 2014 இல் பங்கேற்றதோடு காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை நின்று கொண்டே மாணவர்களுக்கு ஆளுமை பயிற்சி எடுத்த இறையன்பு அவர்களின் உணர்வும், பண்பும் என்றென்றும் நினைத்து மகிழத்தக்கதாகும். 

 

பயிற்சி வகுப்பு எடுப்பதிலும், பயிற்சி கொடுப்பதிலும் அவருக்கு அளவற்ற ஈடுபாடு. வகுப்பின் நிறைவு பகுதியின் போது மாணவர்கள் அனைவரையும் பெயர் சொல்லி அழைத்ததை எண்ணி மாணவர்கள் மட்டுமல்ல, நாங்கள் அனைவருமே வியந்து போனோம். காலையில் அறிமுகப்படலத்தின் போது அவரவர் எழுந்து தங்களின் பெயர்களை உச்சரித்ததை மனதில் வைத்து மாலையில் அவர்களின் பெயர்களை நினைத்துச் சொல்லும் அவரின் நினைவாற்றல் பிரமிப்பை ஏற்படுத்தியது.

 

ஈரோடு புத்தகத் திருவிழாவில் இறையன்பு ஆற்றிய சொற்பொழிவுகள் அனைத்தும் தனித்தனியாக முத்திரை பதித்தவை. 2008 இல் 'ரௌத்திரம் பழகு' என்ற தலைப்பிலும் 2012 இல் 'நாம் ஏன் அடிமையானோம்' என்ற தலைப்பிலும், 2015 இல் 'வனநாயகம்' என்ற தலைப்பிலும் 2017 இல் ‘எது ஆன்மீகம்’ என்ற தலைப்பிலும், 2020 இல் 'பயணங்கள் முடிவதில்லை' என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தியுள்ளார். ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத தலைப்புகள். ஆனால் தனிநூலாக வெளியிடும் தரத்திலும் தயாரிப்பிலும் நிகழ்த்தப்பட்ட ஆழமான ஆய்வுரைகள். இவை மக்கள் சிந்தனை பேரவைக்கு கிடைக்கப்பெற்ற அனுபவங்கள்.

 

"He who instilled the dream of 'IAS' in the youth like an 'ISI' stamp"-makkal sinthanai Council

 

ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு இதுபோன்ற ஆயிரமாயிரம் அனுபவங்கள் அவர் மூலம் கிட்டியுள்ளன. அரசு பணியாளராக அவர் ஆற்றிய நற்பணிகள் அந்தந்த பகுதிகளில் அவர் பெயரை காலகாலத்திற்கும் சொல்லும் கல்வெட்டுகள் போல் நிலைபெற்றிருக்கின்றன. உச்ச அதிகாரம் பெற்ற உயர் மனிதன் என்ற சுவடே இல்லாமல் இவரால் இயல்பாக நடந்துகொள்ள முடிந்துள்ளது. அதிகாரம் இவரின் கண்களை மறைத்ததில்லை. உயர் அதிகாரி என்ற பிம்பம் இவரின் உடல்மொழியில் ஒட்டவில்லை.

 

இறையன்பு ஐஏஎஸ் இப்போது தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருந்து பணிநிறைவு பெற்றுள்ளார். இனிமேல் இவரின் பணி, சுதந்திர தமிழ்நாட்டை உருவாக்கும் சூத்திரங்களை உள்ளடக்கியதாக விளங்கும். இவரின் அறிவும் ஆற்றலும் தன்னம்பிக்கையோடு தமிழக இளைஞர்களை விளங்க வைப்பதாக அமையும், அமைய வேண்டும். பதவியில் இருந்த காலத்தில் மக்கள் சிந்தனை பேரவையின் முன்னெடுப்புகளுக்கு முழு ஒத்துழைப்பை நல்கிய இவருக்கு இவரின் பணி நிறைவு நேரமே நன்றி சொல்வதற்கு ஏற்ற காலம் என்று கருதியே பேரவை சார்பில் இந்த அறிக்கையை பதிவிடுகிறோம். அவரின் வெற்றி பயணம் முழு வீச்சோடு தொடரும். தொடர வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்