பீகார் மாநிலம் பாட்னாவில் நாளை எதிர்க்கட்சிகள் மாநாடு நடைபெற இருக்கிறது. இதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இன்று சென்னையிலிருந்து தமிழக முதல்வர் பாட்னா கிளம்பினார்.
இந்த மாநாட்டில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்க உள்ளன. ஆறு மாத காலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இதற்காக திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர். பாலு ஆகியோர் பாட்னா புறப்பட்டனர்.
இந்நிலையில் லாலு பிரசாத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்துள்ளார். ராஷ்டிர ஜனதா தளம் தலைவரும் முன்னாள் பீகார் முதல்வருமான லாலு பிரசாத்தை சந்தித்த முதல்வர் அவருக்கு புத்தகம் ஒன்றையும் பரிசளித்தார். இந்த சந்திப்பு தொடர்பாக தமிழக முதல்வர் அவருடைய டிவிட்டர் பக்கத்தில், ''கலைஞர் மீதான லாலு பிரசாத்தின் ஆழ்ந்த பாசத்தை நாம் அறிவோம்; அதே அன்போடு என்னை வரவேற்றார். சமூக நீதியின் ஒளியை உயர்த்தி பிடிக்க லாலு பிரசாத் என்னை வாழ்த்தினார்” எனப் பதிவிட்டுள்ளார்.