கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாடாளுமன்றத் தொகுதிகளில் ஆலோசனையை தீவிரமாக நடத்தி வந்தார். அதன் தொடர்ச்சியாக அண்மையில் அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில் அதிமுகவின் அவசர செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், 'இபிஎஸ் தன்னை அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று கூறுவதை சென்னை உயர்நீதிமன்றம் தவறு எனக் கூறியுள்ளது. இதனை ஒப்புக்கொண்டு எடப்பாடி பழனிசாமி தன்னை இணை ஒருங்கிணைப்பாளர் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி அனுப்பிய அதிமுக தொடர்பான முடிவுகளை தேர்தல் ஆணையம் கோப்புகளில் மாத்திரமே எடுத்துக் கொண்டுள்ளது. பொதுச்செயலாளர் எனக் கூறி கட்சியை தன் வசப்படுத்தி கட்சியின் பலன்களை அனுபவித்து வருகிறார். அவருடைய படத்தை போட்ட படிவங்கள் மூலம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது செல்லத்தக்கது அல்ல. எனவே நடைபெற்ற அதிமுகவின் அவசர செயற்குழு முடிவுகளை ஏற்றுக்கொள்ளக்கூடாது' என தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி தரப்பு புகார் மனு கொடுத்துள்ளது.