விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படமும் வினோத் இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் துணிவு படமும் பொங்கல் ரிலீசுக்கு காத்திருக்கிறது. தமிழில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒரே சமயத்தில் 8 ஆண்டுகள் கழித்து வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
'வாரிசு' மற்றும் 'துணிவு' ஆகிய இரண்டு படங்களுக்கும் சமமான அளவில் திரையரங்குகள் ஒதுக்கப்படுவதாக உதயநிதி ஸ்டாலின் முன்னதாக தெரிவித்திருந்த நிலையில், வாரிசு பட தயாரிப்பாளர் தில்ராஜு, "தமிழ்நாட்டில் விஜய்தான் முன்னணி ஹீரோ. அதனால் வாரிசு படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும். இது தொடர்பாக உதயநிதியை சந்தித்துப் பேசப் போகிறேன்" என ஒரு பேட்டியில் பேசியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பல பிரபலங்களும் இது தொடர்பாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஜய், அஜித் ஆகியோரை வைத்து படம் இயக்கிய பேரரசுவிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பேரரசு, ''எப்பொழுதுமே எம்ஜிஆர் சிவாஜி, ரஜினி கமல், விஜய் அஜித் அவர்களை ஈக்குவலாகத்தான் பார்க்கிறோம். ஒருவருக்கொருவர் ஈக்குவலாக இருந்தால்தான் அந்த தரத்தில் வைப்பார்கள். விஜய்க்கு வேறு ஒரு ஹீரோவை வைக்கமாட்டேன் என்கிறார்கள். தமிழ் மக்கள் எம்ஜிஆர்க்கு இணையாக சிவாஜியை வைத்தார்கள். ரஜினிக்கு இணையாக கமலை வைத்தார்கள். இப்பொழுது விஜய் அஜித்தை நாம் ஈக்குவலாக வைத்துவிட்டோம்.
இப்படி சொல்வது ஒரு போரை உருவாக்கும். இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆவதே மோதலாக இருக்கிறது. இதில் இவர் பற்ற வைக்கிறார். என்னைப் பொறுத்தவரை இரண்டு பேரும் ஈக்குவல்தான். இரண்டு படமும் சமமாக பெரிய வெற்றி அடைய வேண்டும். எந்தப் படம் வெற்றி அடையுதோ அந்தப் படம்தான் நம்பர் ஒன். ஹீரோவை பார்க்கக்கூடாது. வாரிசு துணிவை விட பெரிய வெற்றி அடைந்தால் வாரிசு நம்பர் ஒன். வாரிசை விட துணிவு வெற்றியடைந்தால் துணிவு நம்பர் ஒன். படம்தான் நம்பர் ஒன். ஹீரோக்கள் சமம்தான்'' என்றார்.