ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரசின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரைக் களமிறக்கத் தீவிரம் காட்டி வருகிறது. அதிமுகவின் எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என இருவரும் மாறி மாறி ஆதரவாளர்களைச் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் ஹெச்.ராஜா பேசுகையில், ''நீங்கள் என்றைக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வேட்பாளர் என்று சொன்னீர்களோ அன்றே எதிர்க்கட்சியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஏனென்றால் அவர் அப்படிப்பட்ட மனிதன். சட்டமன்றத்திலிருந்து கொண்டே கலைஞரைப் பற்றி சர்ச்சையாக பேசி பின்னர் மன்னிப்பு கேட்டார். மோடியும் ஜெயலலிதாவும் ஒரு மணி நேரம் என்ன செய்தார்கள் என்று பேசக்கூடிய விகாரமான, கேவலமான ஆள். தமிழ்நாடு முழுக்க ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுடைய படத்தை தாய்மார்கள் துடைப்பத்தால் அடித்தார்கள். இந்தச் சம்பவத்தை யாராலும் மறந்துவிட முடியாது. எனவே அவரே அவருக்கு குழியை வெட்டிக் கொள்வார். எதிர்க்கட்சிக்காரன் ஜெயித்து விடுவான்'' என்றார்.