பா.ஜ.க.வின் வேல் யாத்திரைக்கு காவல்துறை அனுமதி வழங்கக்கூடாது' என்று தமிழக டி.ஜி.பி திரிபாதியிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் மனு அளித்திருந்தார்.
இந்நிலையில் வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி பாஜகவினர் டி.ஜி.பி அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், ஏற்கனவே வேல் யாத்திரை அடுத்த மாதம் ஆறாம் தேதி திருத்தணியில் தொடங்கி திருச்செந்தூரில் முடிய இருக்கிறது. இது குறித்து ஏற்கனவே அனுமதி கடிதம் கொடுத்து இருக்கிறோம். அதை நினைவூட்டுவதற்காக தற்பொழுது வந்தோம்.
எங்களுடைய உரிமை, நாங்கள் அனுமதி கேட்கிறோம். திருமாவளவனுக்கு எங்களின் கடமையை தடுப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று தெரியவில்லை. அவர் எங்களுக்கு எதிராக கடிதம் கொடுப்பதற்கு முன்பாக நேற்று தி.மு.க தமிழகத்தை மீட்போம் என்று ஒன்பதாம் தேதி வரை தினசரி ஒரு நகரிலே சிறப்பு கூட்டங்கள் நடைபெறும் என அறிவித்து இருக்கிறார். அதற்கும் சேர்த்து திருமாவளவன் தடை கேட்டு இருந்தால் நல்லா இருக்கும்.
தேர்தல் நேரம் என்பதால் அவர்கள் எல்லாவற்றையும் தேர்தலோடு இணைத்துப் பார்க்கிறார்கள். இந்த யாத்திரை குறித்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே அறிவித்திருந்தோம். அதேபோல் அனுமதிக் கடிதமும் ஒரு மாதத்திற்கு முன்பே கொடுத்திருந்தோம். அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எங்களுடைய மாநில தலைவர் 60 இடங்களில் பேச இருக்கிறார் என்றனர்.