உத்தரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் 19 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்களை முன்னெடுத்து உள்ளன.
இந்நிலையில் இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், ராகுல் காந்தி தாக்கப்பட்டதை கண்டித்தும் தமிழக காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது. பெரம்பூர் ரயில் நிலையம் அருகே வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரவியம் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடர்பாளர் குஷ்பு கலந்துகொண்டார். ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தைச் சந்திக்கச் சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டு தாக்கப்பட்டதற்கு இந்தப் போராட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடர்பாளர் குஷ்பு, ராகுல்காந்தி தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். அதோடு மட்டுமல்லாமல் அண்மையில் மத்திய அமைச்சர் அமித்ஷா கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த போது அவர் மீண்டு வர வேண்டும் என ட்வீட் பதிவு செய்யப்பட்டிருந்ததை பயன்படுத்தி தான் பா.ஜ.க.வில் இணையப் போவதாக பலரும் வதந்திகளை பரப்பி வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.