சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாக கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து புகார் தொடர்பாக தேடப்பட்டு வந்த ஹரிபத்மனை ஹைதராபாத்தில் வைத்து போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மகளிர் ஆணையம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் டிஜிபி லத்திகா சரண் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
மாநில மகளிர் ஆணையத்தை தொடர்ந்து இன்று காலை 11.30 மணிக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் காவல்துறை எஸ்.பி. மகேஸ்வரன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர் காலாஷேத்ராவில் விசாரணையை துவங்கினர். இந்த விசாரணை குழு சுமார் 1 மணி அளவில் தனது விசாரணையை நிறைவு செய்தது. இந்த ஒன்றரை மணிநேரத்தில், கலாஷேத்ரா கல்லூரி முதல்வர் பகல ராம்தாஸ், இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன், துணை இயக்குநர் பத்மாவதி உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்றது.
அதேநேரம் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் உதவி பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்ட நிலையில், தனக்கு ஜாமீன் வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்தநிலையில் ஹரிபத்மன் தாக்கல் செய்த மனுவை நீதிபதி மோகனாம்பாள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.