பனங்காட்டு படை எனும் அரசியல் கட்சியைச் சேர்ந்த பிரமுகரான ஹரிநாடார், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு 30 ஆயிரம் வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பெற்றிருந்தார். அதேபோல் இதற்கு முன்பு நடந்த நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் போட்டியிட்டு இருந்தார். இவர் மீது கர்நாடக மாநில காவல் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் பணமோசடிப் புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வெங்கட்ரமணி என்ற நபரிடம், 170 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாகவும், அதற்கு கமிஷன் தொகையாக 7 கோடியே 20 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாகவும் அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் புகார் தொடர்பாக ஹரி நாடார் மற்றும் ஆறு பேர் மீது கர்நாடக போலீசார் சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தப் புகாரில் ஆறாவது குற்றவாளியாக ஹரிநாடார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மோசடி, கொலை மிரட்டல், கூட்டுச் சதி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் பெங்களூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு தொடர்ந்து சம்மன் அனுப்பியும் ஹரிநாடார் ஆஜராகாத நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தல் பணிக்குப் பிறகு அவர் கேரளாவிற்குச் சென்ற நிலையில், இந்தப் புகாரின் அடிப்படையில் கேரளாவில் பதுங்கியிருந்த ஹரிநாடாரை பெங்களூர் போலீசார் கைது செய்து கர்நாடகா அழைத்துச் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சில நபர்களை போலீசார் தேடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கு பெங்களூர் குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹரி நாடார், சமீபத்தில் ஒரு திரைப்படத்தை தயாரித்து, அதில் அவரே கதாநாயகனாக நடிப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.