தமிழகம் முழுவதும் சரஸ்வதி பூஜை, விஜயதசமி வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் வீடுகள், வேலை செய்யும் நிறுவனங்கள், கடைகள், வாகனங்கள் என அனைத்தையும் தூய்மைப்படுத்தி அதனை மலரால் அலங்கரித்து இறைவழிபாடு செய்கின்றனர். அதேபோல் விஜயதசமி(12.10.2024) அன்று முதன்முதலாகப் பள்ளிச் செல்லும் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பார்கள். இதன்மூலம் தொழில் வளர்ச்சி மற்றும் கல்வி வளர்ச்சி கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் ஆயுத பூஜை மற்றும் விஜசதசமிக்கு தலைவர்கள் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில், “உழைப்பின் உன்னதத்தை அனைவரும் அறிந்து, செய்யும் தொழிலைத் தெய்வமென மதித்து, அன்னை பராசக்தியின் அருளை வேண்டி, தொழில் சார்ந்த கருவிகளை தெய்வத்தின் திருவடிகளில் படைத்து வழிபடும் நாள் ஆயுத பூஜை திருநாள் ஆகும்.
விஜயதசமி நாளில் ஆரம்பிக்கும் அத்தனை காரியங்களும் வெற்றியில் முடியும் என்ற நம்பிக்கையில் மக்கள் அன்னை மகா சக்தியை வழிபட்டு நற்காரியங்களைத் தொடங்கும் வெற்றித் திருநாளே விஜயதசமி பண்டிகையாகும். மக்கள் அனைவரும் கல்வியிலும், செல்வத்திலும், துணிவிலும் சிறந்து விளங்கவும், அவர்களது வாழ்வில் வெற்றிகள் குவியவும் அருள் புரியுமாறு, உலகிற்கெல்லாம் தாயாக விளங்கும் அன்னை பராசக்தியைப் போற்றி வணங்கி அனைவருக்கும் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்”எனக் குறிப்பிட்டுள்ளார்.