Skip to main content

“இந்த மகிழ்ச்சி தொடர்ந்து நீடிக்க வேண்டும்” - மா. சுப்பிரமணியன் பேட்டி!

Published on 02/11/2021 | Edited on 02/11/2021
This happiness must continue

 

தமிழ்நாட்டில் கரோனாவின் தாக்கத்தைக் கருத்தில்கொண்டு கட்டுப்பாடு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு தொடர்ந்து அறிவுறுத்திவருகிறது. இந்நிலையில், தீபாவளிக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் புத்தாடைகள், பலகாரங்கள் மற்றும் பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்துவருகின்றனர். அதேபோல், சென்னை தியாகராய நகரில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கரோனா விழிப்புணர்வு குறித்த பிரச்சாரத்தை துவங்கிவைத்தார்.

 

கடை வீதிகளில் குவிந்த மக்களிடையே ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதேபோல் ரங்கநாதன் தெரு, உஸ்மான் தெரு ஆகிய இடங்களில் உள்ள கடைகளுக்கு நேரடியாகச் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கினார். இந்த நிகழ்வின்போது மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், “துணிமணிகளை வாங்குவதற்காக மட்டும் ரங்கநாதன் தெருவுக்கு நீங்கள் வருபவர்களாக இருக்க வேண்டும். கரோனா என்கிற நோயையும் கூடுதலாக விலைகொடுக்காமல் வாங்கிச் செல்பவர்களாக நீங்கள் இருக்க கூடாது.  எனவே மாஸ்க் அணிந்து வர வேண்டும். அதேபோல் மாஸ்கை மூக்கு, வாயை மறைப்பது மாதிரி அணிந்துவர வேண்டும். சென்னையைப் பொறுத்தவரை தொற்றின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் கீழே குறைந்துவருகிறது. இந்த மகிழ்ச்சி தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்கிற விருப்பத்தின் அடிப்படையில்தான் இந்த விழிப்புணர்வு இப்போது நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது” என கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்