கள்ளக்குறிச்சி நகரை ஒட்டி உள்ளது காந்தி ரோடு மேட்டுத் தெரு. இப்பகுதியில் வசிப்பவர் பெரியவர் சீதாபதி. இவரது மனைவி 65 வயது ராஜலட்சுமி. இவர் வீட்டில் தனியாக இருந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், கடந்த 20ஆம் தேதி பட்டப்பகல் நேரத்தில் ராஜலட்சுமியின் வீட்டுக்குச் சென்றார். அந்த நபர் அவரது கணவர் சீதாபதி அனுப்பிவைத்ததாக கூறியுள்ளார். அதை நம்பி அவரை வீட்டுக்குள் அழைத்துள்ளார் ராஜலட்சுமி. அப்போது அந்த மர்ம நபர், உங்கள் உடலில் கை, கால், வலி இருப்பதாகவும் அதைக் குணப்படுத்துவதற்குப் பூஜை செய்ய வேண்டும் என்றும் உங்கள் கணவர் கூறி என்னை இங்கு அனுப்பிவைத்துள்ளார்.
அதனால் பூஜை செய்யுமாறு உங்களை கணவர் சீதாபதி கூறியதாக இந்த மர்ம நபர் கூறியுள்ளார். அதனை உண்மை என்று நம்பிய ராஜலட்சுமி, வீட்டுக்குள் அழைத்துச் சென்று பூஜை பொருட்கள் தயார் செய்யுமாறு கூறியுள்ளார். அப்போது பூஜைக்கான ஏற்பாடுகள் தயாராகிக்கொண்டிருந்தபோது, ராஜலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த நகையைப் பூஜையில் வைக்க வேண்டும் என்ற அந்த மர்ம நபர், 11 பவுன் நகையை அபகரித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மாயமாக மறைந்து சென்றுவிட்டார். தான் ஏமாற்றப்பட்டது குறித்து அதிர்ச்சியடைந்த ராஜலட்சுமி, பின்னர் இதுகுறித்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்த கள்ளக்குறிச்சி போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி நகரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோட்டைமேடு பகுதியில் வாகனத் தணிக்கையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு நபரை சந்தேகத்தின் பேரில் மடக்கிப் பிடித்து விசாரணை செய்தனர். அதில், அவர் ஆம்பூரைச் சேர்ந்த சோட்டா சாயபு மகன் ஃபாரூக் என்றும் கள்ளக்குறிச்சி வாய்க்கால் மேட்டு தெருவைச் சேர்ந்த ராஜலட்சுமியிடம் மந்திர பூஜை போடுவதாகக் கூறி நகையைத் திருடிச் சென்றதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஃபாரூக்கிடமிருந்து நகையைப் பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். மேலும் ஃபாரூக் மீது குடியாத்தம் காவல் நிலையத்தில் மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. வயதான மூதாட்டியிடம் பூஜை போடுவதாகக் கூறி நகை பறித்த மர்ம நபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் கள்ளக்குறிச்சி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.