கடந்த 2018ஆம் ஆண்டு திருமயம் அருகே, விநாயகர் சதுர்த்தி விழா மேடை அமைத்து பேசுவது மற்றும் விழாவிற்கு அனுமதி வழங்குவது தொடர்பான சம்பவத்தில், அங்கே பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களுக்கும் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச். ராஜாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நீதிமன்றத்தைத் தரக்குறைவான வார்த்தையால் ஹெச். ராஜா விமர்சித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் துரைசாமி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் 2018ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு மேடை அமைத்துப் பேச காவல்துறை அனுமதி மறுத்ததாகவும், நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்போதைய பாரதிய ஜனதாவின் தேசியச் செயலாளர் ஹெச். ராஜா நீதிமன்றத்தை இழிவான சொற்களால் விமர்சித்ததாகவும் அதுகுறித்து திருமயம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கு திருமயம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஹெச். ராஜா மீது பதியப்பட்ட குற்றப்பத்திரிகை நகலை அரசுத் தரப்பு தாக்கல் செய்தது. திருமயம் நீதிமன்றத்தில் அடுத்த மாதம் 23ஆம் தேதி வழக்கு விசாரணை தொடங்கும் என அரசு தரப்பு தெரிவித்தது. ஆனால், ஹெச். ராஜா காரைக்குடியில் உள்ள நிலையில், குற்றப்பத்திரிகை நகலில் தலைமறைவு எனக் காண்பிக்கப்பட்டுள்ளது என அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார். அதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் நிலையில், நீதிமன்றத்தைத் தரக்குறைவாக விமர்சித்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ஹெச். ராஜா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த ஜாமீன் மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில், கீழமை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளதால் அங்கு ஆஜராக ஹெச்.ராஜாவுக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை, அவரது முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.