தமிழகத்தில் பான்மசாலா, குட்கா பொருட்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தடையை மீறி பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்தும் குட்கா பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்வது தொடர்கிறது. தற்போதைய அரசு தடைசெய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்ய முற்றிலும் ஒழிக்க வேண்டும் என காவல்துறையை முடுக்கிவிட்டுள்ளது. அதன்படி காவல்துறை தலைவர் டி.ஜி.பி சைலேந்திரபாபு தமிழகம் முழுவதும் பான்மசாலா, குட்கா விற்பனை பொருட்களை கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் தடையை மீறி பான்மசாலா, குட்கா பொருட்கள் விற்பனை குறித்து போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் வரும் வழியில் உள்ள வளவனூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தீபா தலைமையிலான போலீசார் நேற்று புதுச்சேரி மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களை சிறுவந்தாடு அருகே தடுத்து நிறுத்தி வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அதிவேகமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது ஆறு மூட்டைகளில் குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காரை ஓட்டி வந்த நபரிடம் நடத்திய விசாரணையில் புதுச்சேரி மாநிலம் மடுகரைச் சேர்ந்த சாகுல் அமீது, நிதிஷ்குமார் என்பதும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு பான்மசாலா, குட்கா பொருட்களை கடத்திச் சென்று விற்பனை செய்வதற்கு துணையாய் இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவர்கள் கடத்திவந்த குட்கா, கடத்த பயன்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை செய்ததில் புதுச்சேரி நெட்டப்பாக்கம் கணபதி என்பவரிடமிருந்து தான் குட்கா பொருட்களை மொத்தமாக வாங்கி வந்ததாக தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து போலீசார் குடோனைச் சோதனையிட்டனர் பின்னர் அவரிடம் இருந்து மூட்டை மூட்டையாய் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மொத்த விற்பனை செய்தவரையும் கைது செய்த போலீசார் அவருடன் வியாபாரத்திற்கு உடந்தையாக 17 வயது சிறுவனையும் கைது செய்துள்ளனர். கடத்திவரப்பட்ட குட்கா பொருட்களின் மதிப்பு சுமார் ஐந்து லட்சம் என போலீசார் மதிப்பு மதிப்பிட்டுள்ளனர்.