Skip to main content

குட்கா விவகாரம்; அதிமுக முன்னாள் அமைச்சர் உட்பட 30 பேருக்குச் சிறப்பு நீதிமன்றம் குற்றப்பத்திரிகை வழங்கியது

Published on 07/09/2021 | Edited on 07/09/2021

 

The Gutka affair; A special court has indicted 30 people, including a former ADMK minister

 

குட்கா முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்ட 30 பேருக்குச் சென்னை சிறப்பு நீதிமன்றம் குற்றப்பத்திரிகையை வழங்கியது.

 

தமிழகத்தில் குட்கா, புகையிலை, பான் மசாலா போன்றவை 2013ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட நிலையில், சந்தையில் தொடர்ந்து விற்பனையாகி வந்தது. தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் தமிழகத்தில் கிடைப்பதில் அமைச்சர்களுக்கும், மத்திய மாநில அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் வழக்கு, சென்னை 8வது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

 

சிபிஐ-யை தொடர்ந்து  சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் 2018ஆம் ஆண்டு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், இந்த வழக்கிற்கான குற்றப்பத்திரிக்கையைச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத் துறை தாக்கல் செய்தது.

 

அமலாக்கத் துறை உதவி இயக்குநர் தயாரித்துள்ள இந்த குற்றப்பத்திரிக்கையில், குட்கா சட்டவிரோத விற்பனை விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, கிடங்கு உரிமையாளர் மாதவ ராவ், உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார், கலால் வரித்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், கிடங்கு உரிமையாளர் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், ஆந்திராவைச் சேர்ந்த அருணா குமாரி, சூரிய புஷ்பாஞ்சலி உள்ளிட்ட 27 பேருக்கு எதிராகவும், 3 நிறுவனங்களுக்கு எதிராகவும் ஆதாரங்கள் இடம்பெற்று இருந்தது.

 

மேலும், ஏற்கனவே சிபிஐ பதிவு செய்த வழக்கில் தமிழக காவல்துறையைச் சேர்ந்த இரு அதிகாரிகள், உணவு பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த இரு அதிகாரிகள், வணிக வரித்துறையைச் சேர்ந்த இரு அதிகாரிகள், கலால் வரித்துறையை சேர்ந்த ஒரு அதிகாரி என 7 அரசு ஊழியர்களும் இந்த 30 பேரில் அடங்குவர் என்றும், இவர்கள் உள்ளிட்ட பலர் அரசு ஊழியர்கள் மீது அதிகார துஷ்பிரயோகம், கூட்டுச்சதி, சட்டவிரோத அன்பளிப்பு கேட்பது உள்ளிட்ட பிரிவுகளில் சிபிஐ வழக்குப் பதிந்துள்ளதாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

 

குறிப்பாக, 2013 மே மாதம் முதல் 2016 ஜூன் மாதம் வரை சட்டவிரோத விற்பனை மூலமாக 639 கோடியே 40 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாகவும், அந்த பணத்தின் மூலம் ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய இடங்களில் அசையும் அசையா சொத்துக்களை தங்கள் பெயரிலும், உறவினர்கள் பெயரிலும் வாங்கியது அமலாக்கத்துறை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், மத்திய மாநில அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்துள்ளதால் 30 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு இருந்தது. சட்டவிரோதமாகச் சம்பாதித்த பணம் மூலம் 246 கோடியே 10  லட்ச ரூபாய் அளவிற்குச்  சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதால் அவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

 

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜராகியிருந்த முன்னாள் அமைச்சர் ரமணா உள்ளிட்ட 27 பேருக்கும், 3 நிறுவனங்களுக்கும் அவர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டது. கொடுங்கையூரைச் சேர்ந்த சீனிவாசன் ஆஜராகாததால் பை வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணை செப்டம்பர் 21 ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்