Skip to main content

துப்பாக்கிச்சூடு: எந்த காவல் நிலையத்திலும் நான் புகார் அளிக்கவில்லை; துணை தாசில்தார் பரபரப்பு பேட்டி

Published on 02/06/2018 | Edited on 02/06/2018


தூத்துக்குடி கலவரம் தொடர்பாக எந்த காவல் நிலையத்திலும் நான் புகார் அளிக்கவில்லை என துணை தாசில்தார் கோபால் கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் செந்தூர்ராஜன் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில்,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடக்கோரி கடந்த 22ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் தொடர்பாக திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலர் (துணை தாசில்தார்) கோபால் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், அதன் பேரில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும். போலீசார் தடியடி, துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகின.

இதுதொடர்பாக ஸ்ரீவைகுண்டம் வட்ட வழங்கல் அலுவலராக (துணை தாசில்தாராக) பணிபுரிந்து வரும் கோபால் கடந்த 22ம் தேதி அன்று தூத்துக்குடி சப்-கலெக்டர் உத்தரவின் பேரில் நிர்வாக நடுவராக தூத்துக்குடி 3ம் மைல் பகுதியில் பணியில் இருந்ததாகவும், அப்பகுதியில் எந்தவிதமான பிரச்னையும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக தான் எந்த ஒரு காவல்நிலையத்திலும் எந்த புகாரும் அளிக்கவில்லை எனவும் கூறியுள்ளார். ஆனால், தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்ததாக எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் அவரும் குடும்பத்தினரும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும், எனவே மேற்படி செய்தி தொடர்பான உண்மைத்தன்மையை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் வருவாய்துறை அலுவலர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

இதன்அடிப்படையில் கலெக்டர் பொய்யான புகார் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வருவாய்த்துறை அலுவலர்களை இதுபோன்ற பொய்யான புகார் அளிக்க அரசுத்துறை அதிகாரிகள் வற்புறுத்துவதை தவிர்க்கவேண்டும் என வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் தூத்துக்குடி கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர். அம்மனுவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கலவரம் குறித்து வருவாய்த்துறையினர் புகார் கொடுத்துள்ளதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் புகார் பொய்யானது என்று வருவாய் துறை மறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்