
சேலம் பெரியார் பல்லைக்கழக தொலைதூர இயக்குநரகத்தின் மூலம் நடத்தப்படும் படிப்புகளில், கொல்கத்தாவை சேர்ந்த சரோஜ்குமார் மஜூம் என்பவர் படிப்பை முடித்து சான்றிதழை கேட்டபோது, கட்டணம் ஏதும் செலுத்தாததால் சான்றிதழ் தர மறுத்துள்ளனர். இதுதொடர்பாக கட்டணம் வசூலிப்பதில் முறைகேடு நடந்துள்ளதாக ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் குறித்து கடந்த 2016 ஆம் ஆண்டு சேலம் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தியதில், தொலைதூர கல்வி மையத்தில் மாணவர்கள் செலுத்திய கட்டணத்தில் நாடு முழுவதும் 8 கோடி ரூபாய் வரை மோசடி நடந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து, தொலை தூர கல்வி மைய முன்னாள் இயக்குநர் டாக்டர் குணசேகரன், தமிழ்த்துறை தலைவர் டாக்டர் மாதையன், முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் டாக்டர் பிரின்ஸ் தன்ராஜ், கொல்கத்தாவில் இயங்கும் பெரியார் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயந்த் முகர்ஜி ஆகிய நான்கு பேர் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், தொலைதூர கல்வி இயக்குநரகத்தின் முன்னாள் இயக்குநர் குணசேகரன், தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர் முனைவர் மாதையன் ஆகியோர் முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை நீதிபதி ஏ.டி.ஜெகதிஷ்சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது சேலத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு காவல்துறை அலுவலகத்தில் தினமும் காலை கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் இரண்டு பேருக்கும் முன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.