கின்னஸ் சாதனை படைத்த பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழாவில்: மாஃபா கே.பாண்டியராஜன் பங்கேற்பு
சென்னை அரசு அருங்காட்சியகத்தில் கின்னஸ் சாதனை படைத்த பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் கே.பாண்டியராஜன் பங்கேற்றார்.
கடந்த மே மாதம் 1-ந் தேதி (உழைப்பாளர் தினம்) குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், உலக சாதனை படைக்கும் நோக்கிலும் சென்னை சாந்தோம் தேவாலயம் அருகே உள்ள தனியார் பள்ளியில் இசை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 440 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
அந்த இசை நிகழ்ச்சிக்கு கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் கிடைத்துள்ளது. இதற்கான பாராட்டு விழா நேற்று சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், கலை, பண்பாட்டு மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
விழாவிற்கு பின்னர் அமைச்சர் கே.பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தனியார் பள்ளிகளில் மாணவர்கள் தமிழ் பேசினால் அபராதம் விதிக்கக்கூடாது என பள்ளி கல்வித்துறை மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு என்பது இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அப்படி இருந்தால் அதை தமிழக அரசு எதிர்கொண்டு உடைத்தெறியும். இந்தியை மாணவர்கள் விரும்பி கற்றால் அது அவர்கள் விருப்பம். அதற்கு தமிழக அரசு எந்த தடையும் விதிக்காது.
மேலும், சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியத்தை, உலக அளவில் முதல் 100 சிறந்த அருங்காட்சியங்களில் ஒன்றாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.