மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் இதுநாள்வரை வெளியிடப்படாத நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உதவிப் பெறும் கல்லூரிகளில் குறிப்பாக திருச்சியில் உள்ள கல்லூரிகளில் 20.07.2020இல் மாணவர் சேர்க்கை ஆன்-லைனில் முடிந்தது எப்படி?
இது குறித்து ஓய்வு பெற்ற பேராசிரியர் நம்மிடம் பேசியபோது, திருச்சி மண்டலக் கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில், இணை இயக்குநர் இல்லை - தஞ்சாவூரில் இருக்கிறார். உதவி இயக்குநர் - வேலூரில் இருக்கிறார். கணக்கு அலுவலர் வழுக்கி விழுந்து கால் முறிந்து அலுவலகம் வருவதில்லை. ஸ்டெனோ டைப்பிஸ்ட் திண்டுக்கல்லில் இருக்கிறார். எஞ்சியுள்ள அலுவலக பணியாளர்கள் ஒரு நாள் விட்டு ஒருநாள் அலுவலகம் வருகிறார்கள்.
இதில் பலர் சொந்த விடுப்பும் எடுத்துக் கொண்டு வாரம் முழுவதும் அலுவலகம் வருவதில்லை. மாதாமாதம் இலட்ச ரூபாய் சம்பளத்தை மட்டும் மக்கள் வரிப்பணத்தில் பெற்று சுகமாக வாழ்கிறார்கள்.
மாணவர் சேர்க்கையில் நிகழும் கொடுமைகளை, கட்டணக் கொள்ளைகளைத் தட்டிக் கேட்கவேண்டிய திருச்சி மண்டலக் கல்லூரிக் கல்வி இணைஇயக்குநர் அறிவுடை நம்பி தஞ்சாவூரில் சொந்த வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறார். மாணவர் சேர்க்கையின் முறைகேடுகளுக்கு அலைபேசியில் புகார் சொன்னால் அலைபேசியை எடுப்பதில்லை. அலுவலகத்தில் தொடர்பு கொண்டால் RJD தான் நடவடிக்கை எடுக்கமுடியும் எங்களால் முடியாது என்று தொலைப்பேசியைத் துண்டிக்கிறார்கள்.
திருச்சி தேசியக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையின்போது, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அரசாணை 92-இன்படி எங்களை இலவசமாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றால் பணம் கட்டு இல்லை என்றால் இடம் கிடையாது என்று கல்லூரி நிர்வாகம் மிரட்டுகின்றது. அரசாணையை மீறி தேசியக் கல்லூரி தாழ்த்தப்பட்ட மாணவர்களின் நலனுக்கு எதிராக செயல்படுகின்றது.
தமிழ்நாடு முதல்வர், உயர்கல்வி அமைச்சர், உயர்கல்விச் செயலர் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் அரசு விதிகளுக்கு எதிராக செயல்படும் உதவிபெறும் கல்லூரியில் நடந்து முடிந்துள்ள மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க வேண்டும்.
அரசு கல்லூரிகள் அரசின் விதிகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கையை முறையாக நடத்தி கொண்டிருக்கும்போது, அரசு உதவிபெறும் கல்லூரிகள் / சிறுபான்மைக் கல்லூரிகள் அரசின் விதிகளை மீறி மாணவர் சேர்க்கையை நடத்த யார் அதிகாரம் கொடுத்தது? கல்லூரிகளின் அங்கீகாரத்தையும் சிறுபான்மை கல்லூரிகளின் அங்கீகாரத்தையும் தமிழ்நாடு அரசு இரத்து செய்ய முன்வரவேண்டும்.
கரோனா காலத்தில் அரசு உதவிப்பெறும் கல்லூரிகள் / சுயநிதிக் கல்லூரிகள் கட்டணக் கொள்ளையடிக்கின்றன. ரூ.3000 செலுத்தப்பட்ட சேர்க்கை தொகை தற்போது 16,800/-(பருவம் ஒன்றிற்கு மட்டும்) உயர்த்தப்பட்டுள்ளது. சுயநிதி கல்லூரிகளில் ரூ.12,000/- பெறப்பட்டப் பாடங்களுக்கு தற்போது ரூ.30,000/- பெறப்படுகின்றது. பிஷப் ஹீபர் கல்லூரியில் வணிகவியல் வகுப்பிற்கு ரூ.40,000/- எனக் கட்டணம் நிர்ணயித்துள்ளது என்ற செய்தி அதிர்ச்சியைத் தருகிறது.
ஆன்-லைனில் விண்ணப்பம் செய்யும்போது முற்றுப்புள்ளி, கமா போன்றவை இட்டால் விண்ணப்பம் பதிவாகாது என்பதை எந்த கல்லூரியும் அதற்கான எச்சரிக்கையை இணைய தளத்தில் வெளியிடவில்லை. மேலும், மாணவர் சேர்க்கையின் முதல் பட்டியல், 2ஆம் பட்டியல், 3ஆம் பட்டியல் வெளியிட்ட பின்னரே மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என்ற 2019-20 கல்லூரிக் கல்வி இயக்குநரின் மாணவர் சேர்க்கைக்காக வழிகாட்டு நெறிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.
தமிழக முழுவதும் இதே மாதிரிதான் கல்வி கொள்ளை நடக்கிறது. இதை உடனடியாக தமிழக முதல்வர் தலையிட வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது என்றார் விரிவாக.