கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக காவல் உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் வழிகாட்டுதலின் பேரில், குறிஞ்சிப்பாடி இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா உள்ளிட்ட போலீசார் குறிஞ்சிப்பாடியில் குட்கா, ஹான்ஸ் போன்ற போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கண்காணித்துவந்தனர். இந்நிலையில், இரகசிய தகவல் கிடைத்ததால் 26.08.2021 அன்று நள்ளிரவு சி.சி.டி.வி கேமராவை ஆண்ட்ராய்டு கைபேசி மூலம் கண்காணித்த சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா, காவலர்களுடன் மாறுவேடத்தில் சென்று பதுங்கியிருந்தார்.
அப்போது அங்கு குறிஞ்சிப்பாடி வேலமுதலி தெருவைச் சேர்ந்த முத்தையன் மகன் சக்திவேல் (40) என்பவர், தனது மாமனார் வீட்டில் பதுக்கிவைத்திருந்த ஹான்ஸ் மற்றும் குட்கா போதைப்பொருள் மூட்டைகளை இருசக்கர வாகனத்தில் கொண்டுவரும்போது, கே.வி.எம். நகர் நுழைவாயில் அருகே மாறுவேடத்திலிருந்த சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா உள்ளிட்ட போலீசார் மடக்கிப் பிடித்தனர். அப்போது மூட்டையில் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சக்திவேலை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே பகுதியில் உள்ள தனது மாமனார் கணேசன் வீட்டில் புகையிலை பொருட்களைப் பதுக்கிவைத்து வியாபாரம் செய்வதாக ஒப்புக்கொண்டார்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் குறிஞ்சிப்பாடி கே.என்.வி. நகரில் உள்ள அவரின் மைத்துனர் ராஜா என்பவரது வீட்டு குடோனில் பதுக்கிவைத்திருந்த சுமார் 400 கிலோ குட்கா பொருட்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் 2.5 லட்சம் ஆகும். மேலும், சக்திவேல் கொடுத்த தகவலின் பேரில் குட்கா பொருட்களை விற்பனை செய்த மீனாட்சி பேட்டையைச் சேர்ந்த சிவமணி (49), சத்திரத்தைச் சேர்ந்த கதிர்வேல் (51) ஆகியோரை கைது செய்ததுடன், தலைமறைவாக உள்ள சக்திவேலின் மாமனார் கணேசன், மைத்துனர் ராஜா, வடலூரில் கடை நடத்தும் சுரேஷ் ஆகியோரை தேடிவருகின்றனர். காவல்துறையினர் மாறுவேடத்தில் சென்று போதைப் பொருட்கள் விற்பவர்களை, பதுக்கியவர்களைப் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.