சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளில் கடந்த சில நாள்களாக ஜிஎஸ்டி வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் பொருள்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் ஜிஎஸ்டி வரி பங்கீட்டை வெளிப்படையாக குறிப்பிட்டு ரசீதுகள் போடப்படுகிறதா? முந்தைய வியாபார நடவடிக்கைகளில் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரிகள் முறையாக கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து விசாரித்தனர்.
தம்மம்பட்டி அருகே உள்ள நாகியம்பட்டியில் செயல்பட்டு வரும் ஒரு டைல்ஸ் கடையில் ஜிஎஸ்டி வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். காவல்துறை பாதுகாப்புடன் நடந்த இந்த சோதனையில் ஜிஎஸ்டி முறைகேடுகள் அந்தக் கடையில் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
ஜிஎஸ்டி வரி வருவாயை முறையான தணிக்கைக்கு உட்படுத்தாமல் முறைகேடு செய்தது ஊர்ஜிதம் ஆனால், சம்பந்தப்பட்ட கடைகள், வணிக நிறுவனங்களுக்கு 10 ஆயிரம் முதல் பல லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என ஜிஎஸ்டி வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.