தமிழக கேரள எல்லையில் உள்ள முல்லைப்பெரியாறு அணைப் பகுதிக்கு வல்லக்கடவு பகுதியிலிருந்து வனப்பகுதி வழியாக மின்சாரம் சப்ளையாகி வந்தது.
இந்நிலையில்தான், கடந்த 2000-ல் இப்பகுதி வழியாகச் சென்ற உயரழுத்த மின்கம்பி உரசியதில் காட்டுயானை ஒன்று இறந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 19.06.2000 முதல் பெரியாறு அணைப்பகுதிக்கு, சப்ளை செய்யப்பட்ட மின்சாரம் நிறுத்தப்பட்டது. அன்று முதல் பெரியாறு அணைப்பகுதியில் சோலார் மின் விளக்குகளும், ஒலிக்குறைவான ஜெனரேட்டரும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதற்கு மாற்று ஏற்பாடாக, வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மின் கம்பிகளை வனப்பகுதியில் தரைவழியாகக் கொண்டு செல்ல தமிழக பொதுப் பணித்துறை கேரள அரசிடம் அனுமதி கேட்டது. அதற்கான செலவாக 1 கோடியே 66 லட்சம் ரூபாயைக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தமிழக அரசு கேரள மின்வாரியத்திற்குச் செலுத்தியது.
ஆனால், கேரள வனத்துறை அனுமதி தராததால் பணி காலதாமதமாகி வந்தது. இந்த நிலையில், பெரியாறு அணைக்கு தரைவழி மின்சாரம் கொண்டு செல்வது குறித்து, தமிழக கேரள பொதுப்பணித்துறை, மின்வாரிய அதிகாரிகள் நேற்று வல்லக்கடவு முதல் பெரியாறு அணைவரை ஆய்வு செய்தனர். தமிழக அரசு சார்பாகக் கண்காணிப்பு பொறியாளர் சுகுமார், பெரியாறு அணை செயற் பொறியாளர் சாம் இர்வின், தமிழக மின்வாரியச் செயற்பொறியாளர் சுஜாதா உட்பட அதிகாரிகளும், கேரளா சார்பில் கேரள மின்வாரிய உதவி முதன்மை பொறியாளர் மனோஜ், செயற்பொறியாளர் பார்வதி, அசிஸ்டன்ட் ஃபீல்டு டைரக்டர் விபின்தாஸ், முல்லைப் பெரியாறு காவல்நிலைய டி.எஸ்.பி நந்தன்பிள்ளை மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் இதுகுறித்து பெரியாறு அணை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், வல்லக்கடவிலிருந்து பெரியாறு அணைக்கு தரைவழி மின்சாரம் கொண்டு செல்ல அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. அதனால் தரைவழி மின்சாரம் கொண்டு செல்லக்கூடிய பகுதிகளை இருமாநில அதிகாரிகள் இணைந்து ஆய்வு செய்ததாகவும், இன்னும் ஒருசில நாட்களில் இதற்கான பணிகள் தொடங்க உள்ளதாகவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக, இருபது வருடம் கழித்து மீண்டும் முல்லைப் பெரியாறு அணைக்கு தரைவழி மூலம் மின்சாரம் கொண்டு போக உள்ளனர்.