விஞ்ஞான தொழில்நுட்பங்கள் முன்னேறி உலகம் உள்ளங்கையளவுக்கு அடங்கிச் சுருளுமளவுக்கு ஸ்மார்ட் போன்களும் வந்து விட்டன. வித விதமான வாகனங்கள். ஜன நெருக்கடிக்கு ஈடாகிப் போனது தற்போதைய யுகம். இதில் நமது பாரம்பரிய கால் நடை மாட்டு வண்டிகளைப் பார்ப்பதே தற்போது அரிதாகி விட்டது. இந்த நிலையில் கால்நடைகளின் மீதான பாசம் காரணமாக மாட்டு வண்டியில் தன் திருமண நாளில் மணக்கோலத்தில் மாப்பிள்ளை ஊர்வலம் போயிருக்கிறார் கால்நடை டாக்டர் ஒருவர்.
நெல்லை மாவட்டத்தின் வி.கே.புரம் சிவந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவமுத்து. அருகில் உள்ள ஆம்பூரில் அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்க்கிறார்.
நேற்று இவருக்குப் பாபனாசத்தின் ஆலயத்தில் திருமணம் நடந்தது. கால்நடைகளின் டாக்டராக இருப்பதால் மாப்பிள்ளை அழைப்பை மாட்டு வண்டியில் வைத்துக் கொள்ள ஆசைப்பட்டார். நேற்று காலை மாப்பிள்ளை அழைப்பிற்கு மாட்டு வண்டி ஏற்பாடு செய்யப்பட்டது.
காலை நேரத்தில் மேள தாளத்துடன் மாப்பிள்ளை அழைப்பு நடந்தது தனது வீட்டிலிருந்து சிவந்திபுரம் மெயின் ரோடுப் பகுதி வரை நடந்த மாப்பி்ள்ளை ஊர்வலத்தில் மாட்டு வண்டியில் நின்று கொண்டே சென்றார்.
கால்நடை டாக்டரின் இந்த மாட்டு வண்டி மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்தை வழியோரத்தினர். புருவங்கள் உயர பார்த்து அதிசயித்தனர்.