இன்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், திருவாரூரில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அதன் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், ம.ஜ.க பொதுச் செயலாளர், எம்.எல்.ஏ மு.தமிமுன் அன்சாரி, விவசாயச் சங்க கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் காவிரி தனபாலன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன், தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் மருத்துவர் பாரதிமோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இதில், டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்தும், மத்திய அரசின் உழவர் ஒழிப்புச் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், எதிர்வரும் ஜனவரி 21 வியாழன் அன்று காலை, தஞ்சாவூரில் பிரம்மாண்ட பச்சைக் கொடி பேரணி நடத்துவது என்றும் முடிவானது.
அதற்கு முன்பாக டெல்டா மாவட்டங்களில் இந்தச் சட்டங்களின் பாதகங்களை விளக்கி துண்டுப் பிரச்சார பரப்புரை நடத்துவது என்றும் முடிவுசெய்யப்பட்டது. போராட்டத்தில் பங்கேற்க முடியாதவர்களும், போராட்ட ஆதரவாளர்களும், வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களும், வெளிநாடுவாழ் தமிழர்களும் அன்று காலை சமூக இணையதள வழியான போராட்டங்களில் பங்கேற்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில், ம.ஜ.க மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், மாநில விவசாய அணிச் செயலாளர் அப்துல் சலாம், திருவாரூர் மாவட்டப் பொருளாளர் ஷேக் அப்துல்லா, தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொதக்குடி ஜெய்னுதீன், மாவட்ட விவசாய அணிச் செயலாளர் எரவாஞ்சேரி நஜ்முதீன் ஆகியோர் பங்கேற்றனர்.