ஓடை, மயான ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஈரோடு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை செயற்பொறியாளரிடம் பொதுமக்கள் மனு வழங்கினர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- அவல்பூந்துறை அருகே உள்ள ராட்டை சுற்றி பாளையம், ராட்டை சுற்றி பாளையம் காலனி, சென்னிமலை பாளையம், கொத்துக்காட்டு சாலை பகுதியில் 700 -க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். குரங்கன் ஓடை, அனுமன் நதியை ஒட்டி அர்ஜன காலனி மயானம் அமைந்துள்ளது. அப்பகுதியில் உள்ள சிலர் அனுமன் நதி ஓடையை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மழைக்காலங்களில் மழை நீர் ராட்டை சுற்றி பாளையம், ஆதி திராவிடர் காலனிக்குள் புகுந்து விடுகிறது.
இது தவிர குரங்கு ஓடை அணைக்கட்டு பாசனத்திற்குச் செல்லும் தண்ணீர் மயானத்தின் நடுவே பாய்ந்து மயானத்தின் பரப்பளவை பெரும் பகுதி குறைத்து விட்டது. இது குறித்து பல்வேறு புகார்கள் வந்த நிலையில் ஊருக்குப் பொதுமக்கள் முன்னிலையில் சர்வேயரை அழைத்து வந்து அளவீடு செய்து பார்த்தபோது அதில் ஆக்கிரமிப்பு இருப்பதை தாசில்தார் உறுதி செய்தார். எனினும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. ஆக்கிரமிப்பை அகற்றி மயானத்துக்கான இடத்தை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.