பணியின்போது இறந்த துப்புரவுத் தொழிலாளியின் குடும்பத்துக்கு
நிவாரணம் வழங்கக்கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஆக.16- பணியில் இருக்கும்போது விபத்து ஏற்பட்டு அகால மரணமடைந்த துப்புரவுத் தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடும் குடும்பத்தினருக்கு வேலையும் வழங்க வலியுறுத்தி சிஐடியு சார்பில் புதுக்கோட்டையில் புதன்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை நகராட்சியில் துப்புரவுத் தொழிலாளியாக வேலை செய்தவர் கி.மணிகண்டன். இவர் கடந்த 28.07.2017 அன்று நகராட்சி டிராக்டரில் வேலை செய்து கொண்டிருந்தபோது தவறி விழுந்து அகால மரணமடைந்துவிட்டார். இதற்காக, நகராட்சியில் துப்புரவுத் தொழிலை செய்துவந்த ஒப்பந்த நிறுவனத்திடமிருந்து ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டதாகவும் ஆனால், மணிகண்டனின் குடும்பத்திற்கு ரூ. 20 ஆயிரம் மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், நகராட்சி ஊழியர்களிடம் மணிகண்டனின் குடும்பத்திற்கு வசூலிக்கப்பட்ட தொகையும் வழங்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேற்கண்ட முறைகேடுகளைக் கண்டித்தும், தொழிலாளி கி.மணிகண்டன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும். மரணத்திற்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்தப்படி ஒபந்தத் தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூபாய் ஆயிரம் வழங்க வேண்டும். காண்ராக்ட் முறையை ரத்துசெய்து காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து இணைப்புகுழு (சிஐடியு) மாநிலத் தலைவர் ப.சண்முகம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து சிஐடியு மாவட்டத் தலைவர் க.செல்வராஜ் உரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி சிஐடிய மாவட்டச் செயலாளர் க.முகமதலிஜின்னா, துணைத் தலைவர் எம்.ஜியாவுதீன், பொருளாளர் சி.அடைக்கலசாமி, துணைச் செயலாளர் க.சிவக்குமார் உள்ளிட்டோர் பேசினர்.
-இரா.பகத்சிங்