சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் குழந்தைகள் விளையாட வைத்திருக்கும் விலையுயர்ந்த சைக்கிள் காணாமல் போவது தொடர்பான புகார்கள் அதிகரித்த நிலையில், இது தொடர்பாக போலீசாரின் விசாரணையில் ஓய்வு பெற்ற நீதிபதியின் பேரன் காதல் தோல்வியால் திருடனான கலங்க வைக்கும் பின்னணி தெரியவந்துள்ளது.
சென்னையில் அபிராமபுரம், ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாகச் சிறுவர்கள் பயன்படுத்தும் விலையுயர்ந்த சைக்கிள்கள் காணாமல் போகும் சம்பவம் தொடர்கதையான நிலையில் இது தொடர்பான புகார்கள் குவிந்தன. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் போலீசாருக்கு கிடைத்த ஒரு சிசிடிவி காட்சி விசாரணையின் போக்கையே மாற்றியது. அந்த காட்சியில் சிவப்பு நிற டி ஷர்ட் அணிந்த நபர் குடியிருப்பிலிருந்த சைக்கிளைத் திருடும் காட்சி பதிவாகி இருந்தது. கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சியை அடிப்படையாகக் கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த சரவணன் என்ற 38 வயது இளைஞரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் சில கலங்க வைக்கும் தகவல்கள் வெளியானது. மெட்ராஸ் கிறிஸ்துவ கல்லூரியில் பிஎஸ்சி பட்டம் பெற்ற சரவணன் ஓய்வு பெற்ற நீதிபதியின் பேரன் என்பதும், அவரது தந்தை அசோக் லைலண்ட்டில் தலைமை பொறியாளராக பணிபுரிந்ததும் தெரியவந்தது. தனது இளமை பருவத்தில் உடன் படித்து வந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார் சரவணன். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதல், தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் மனமுடைந்த சரவணன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிச் சுற்றித்திரிந்துள்ளார். 15 வருடங்களுக்கு முன்பே படிப்பை முடித்த சரவணன் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு ஊர் சுற்றிய நிலையில் அவரது பெற்றோரும் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டனர்.
சூளை பகுதியிலிருந்த 1.5 கோடி ரூபாய் மதிப்புடைய வீட்டை விற்று தனது சகோதரிக்கு அதில் பாதியை கொடுத்துவிட்டார். தனது பங்கை தொழில் செய்வதாக நண்பர்களிடம் பணம் கொடுத்து ஏமார்ந்துள்ளார் சரவணன். இப்படி அனைத்தையும் இழந்த சரவணன் இறுதியில் கும்மிடிப்பூண்டி மற்றும் ஆந்திராவின் எல்லைப் பகுதிகளில் ஹோட்டல்களில் பணிபுரிந்த நிலையில், ஹோட்டல்கள் மூடப்பட்டதால் மீண்டும் சென்னை வந்துள்ளார். அதனையடுத்து விலையுயர்ந்த சைக்கிள்களை திருடி அதனை விற்று உணவு உண்டும், மது அருந்தியும் வந்துள்ளார். மேலும் விசாரணையில், தனது சந்தர்ப்ப சூழ்நிலை தன்னை திருடனாக்கிவிட்டது. நீதிபதியான எனது தாத்தாவின் பெயரை சொன்னால் அவருக்கு அவப்பெயர் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார் சரவணன்.