கடலூர் மாவட்டம், வேப்பூர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த பாலக்கவுண்டர் மனைவி பட்டத்தாள் (வயது 75). இவர் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், ஏப்ரல் 6- ஆம் தேதி அன்று இவரது மகள் பார்வதி தனது அம்மா பட்டத்தாளுக்கு காபி கொடுக்கச் சென்றுள்ளார். அப்போது, பட்டத்தாள் கழுத்து, கையில் நகைகள் ஏதுமின்றி இறந்து கிடந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், காவல்துறையிடம் புகார் அளித்தார்.
இதுகுறித்து திட்டக்குடி காவல்துறை டி.எஸ்.பி. சிவா உத்திரவின் பேரில் வேப்பூர் எஸ்.ஐ. சந்திரா, சிறுபாக்கம் குற்றபிரிவு எஸ்.ஐ, ஜம்புலிங்கம் மற்றும் காவல்துறை வழக்குப் பதிந்து விசாரணை செய்து வந்தனர்.
விசாரணையில், வேப்பூர் தெற்கு தெருவைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் சூர்யா (வயது 21) என்பவர் பெரம்பலூர் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் 6- ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த பட்டத்தாளிடம் நகைகளைப் பறிக்க முயன்றுள்ளார். அப்போது பட்டத்தாள் தடுத்ததால், அவரது முகத்தை கையால் மூடி, கழுத்தை நெறித்து கொலை செய்து, நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது.
பின்னர், திருடிய நகைகளை வேப்பூரிலுள்ள அடகு கடைகளில் 95,000 ரூபாய்க்கு அடகு வைத்தார். அதன் மூலம் சூர்யா தனது காதலிக்கு புதிய மொபைல் போன், துணிகளை வாங்கிக் கொடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து, திருச்சியிலுள்ள தனியார் விடுதியில் ஐந்து மாதம் தங்குவதற்கு அட்வான்ஸ் தொகைச் செலுத்தி தங்கியது தெரிய வந்தது.
இது குறித்து வேப்பூர் காவல்துறை வழக்குப் பதிந்து, மூதாட்டியைக் கொலை செய்து நகைகளைத் திருடிய வேப்பூரைச் சேர்ந்த சூர்யா என்ற வாலிபரை கைது செய்தனர்.