தமிழகத்தில் தடையை மீறி தி.மு.க.வினர் கிராம சபை கூட்டங்களை நடத்தினர்.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டம், அயப்பாக்கம் ஊராட்சியில் தி.மு.க.வின் மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதேபோல் வேலூர் மாவட்டத்தில் காட்பாடி அருகே வன்றந்தாங்கல் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பங்கேற்றார்.
மேலும், தூத்துக்குடி மாவட்டம், அரசூர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பங்கேற்றார். புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் தி.மு.க.வினர் கிராம சபை கூட்டங்களை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து, திருவள்ளூர் அருகே கொரட்டூர் ஊராட்சியில் தடையை மீறி நடந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், "அ.தி.மு.க. செயற்குழுவில் வராத கரோனா கிராம சபை கூட்டம் மூலம் வந்து விடுமா? கரோனாவை விட தி.மு.க.வை பார்த்துதான் முதல்வர் பழனிசாமி பயப்படுவதாக விமர்சித்தார். வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை தி.மு.க. போராட்டத்தை கைவிடாது. இது கிராம சபை இல்லை; மக்கள் சபை" என்றார்.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சமூக இடைவெளியுடன் நடத்தப்பட்டதாக ஸ்டாலினுக்கு பதிலளித்தார்.
இதனிடையே, தடையை மீறி கிராம சபை கூட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினர் 200 பேர் மீது வெள்ளவேடு போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.