Skip to main content

ராணுவத்தில் சேர்வதற்காக 10ஆம் வகுப்பு முடித்ததாக ஆள்மாறாட்டம் செய்த பட்டதாரி இளைஞர்

Published on 28/06/2018 | Edited on 28/06/2018
Graduate


ராணுவத்தில் சேர்வதற்காக 10ஆம் வகுப்பு முடித்ததாக ஆள்மாறாட்டம் செய்த பட்டதாரி இளைஞர் முனுசாமி குன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டார்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் ராணுவ முகாமில் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் ஆள்சேர்ப்பு நடைபெற்றது. இதில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்த நவீன்குமார் என்ற வாலிபர் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் நவீன் பயிற்சியில் போதிய ஆர்வம் இல்லாமல் இருந்தார்.

இதையடுத்து, ராணுவ அதிகாரிகள் நவீனை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதில் நவீன் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சரிவர பதில் கூறவில்லை. பின்னர் அவர் சமர்ப்பித்த 10-ம் வகுப்பு டி.சி. உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்தனர். இதையடுத்து அதிகாரிகள் வாலிபரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் தனது பெயர் முனுசாமி என்றும், அதே பகுதியை சேர்ந்த நண்பர் நவீன்குமார் என்பவரிடம் 10-ம் வகுப்பு டி.சி.யை வாங்கி தனது பெயர் நவீன்குமார் என்று ஆள்மாறாட்டம் செய்து ராணுவத்தில் சேர்ந்ததை ஒப்புக்கொண்டார். இதன்பின், ஆள்மாறாட்டம் செய்து ராணுவத்தில் வேலைக்கு சேர்ந்த முனுசாமியை போலீசார் கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில் கைது செய்யப்பட்ட முனுசாமி பி.எஸ்.சி. பட்டதாரி என்பதும், ராணுவத்தில் சிப்பாய் வேலைக்கு இந்த படிப்பு அதிகமாக இருப்பதால் வேலைக்கு சேர்க்கமாட்டார்கள் என்று அதே பகுதியை சேர்ந்த நவீன்குமாரின் 10-ம் வகுப்பு டி.சி.யை வாங்கி ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது.

அதிகம் படித்து விட்டு சிப்பாய் வேலை செய்கிறோமே என்று அவருக்கு ஏற்பட்ட தாழ்வுமனப்பான்மை மற்றும் விருப்பமின்மையே அவரை காட்டிக்கொடுத்து விட்டது என்று போலீசார் கூறினர். கைது செய்யப்பட்ட முனுசாமி குன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டார்.

சார்ந்த செய்திகள்