பட்டதாரி பெண்ணின் இயற்கை வேளாண் காய்கறி தோட்டம்
சிதம்பரத்தை அடுத்த பிச்சாவரம் செல்லும் வழியில் கீழசாவடி கிராமத்தை சார்ந்த கவிதாராமசாமி என்ற பெண் கணித இளங்களை ஆசிரியர் பட்டதாரி ஆவார். இவர் அதே சாலையில் அவரது ஊரில் இருந்து மூன்று கிமீ தூரத்தில் தில்லைவிடங்கன் கிராமத்தில் 40 சென்டு நிலத்தில் இயற்கை வேளாண்தோட்டம் அமைத்து அப்பகுதி மக்களுக்கு இயற்கை வேளாண் காய்கறி வழங்கி வருவது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் நான் கணிதம் இளங்களை ஆசிரியர் பட்டம் பெற்றுள்ளேன். திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது.
படித்தபடிப்புக்கு தேவையான வேலை கிடைக்கவில்லை. எனது கணவர் விவசாயி அவர் உதவியுடன் தில்லைவிடங்கன் கிராமத்திலுள்ள எங்களது இடத்தில் கத்திரி, வாழை, வெண்டை, காய்கறிவகைகள், புடலங்காய் உள்ளிட்டவைகளை கொண்டு வேளாண்தோட்டத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக அமைத்துள்ளேன். இதில் பூ வகை செடிகளை ஊடுபயிராக நட்டுள்ளேன். வீட்டில் மாடு, ஆடு உள்ளது அதன் கழிவுகளை மட்டும் தோட்டத்திற்கு போட்டு வளர்த்து வருகிறேன். வேதிபொருட்கள் போடாமல் வளருவதை பார்த்து இந்த பகுதியில் உள்ளவர்கள், சாலையில் செல்பவர்கள் காய்கறிகளை பறிக்கும் போதே வாங்கி செல்கிறார்கள். இதன் மூலம் ஒரு ஒரு நாளைக்கு ரூ 300 லிருந்து 500 வரை கிடைக்கிறது. இதனை கொண்டு குடும்பத்தின் செலவுகளை கவனித்து வருகிறோம். தற்போது மக்கள் இயற்கை வேளாண்பொருட்களுக்கு தனி கவனம் செலுத்தி வருகிறார்கள் அதனால் நல்லமுறையில் உள்ளது.
இப்போதுள்ள பெண்கள் கற்ற கல்விக்கு சரியான வேலை கிடைக்கவில்லையென்றால் இதேபோல் அவர்களது வீட்டு தோட்டத்தில் அல்லது மாடியில் காய்கறி தோட்டம் அமைத்து வேதிபொருள் இல்லாமல் நம்ம வீட்டில் சேகரிக்கப்படும் இயற்கை கழிவுகளை கொண்டு செடிகளை வளர்த்து நம்ம வீட்டுக்கு அருகில் உள்ளவர்களுக்கு இயற்கை கய்கறிகளை விளையவைத்து கொடுக்கலாம். இதனால் பல பேரை நோய்வாயிலிருந்து காப்பாற்றலாம். தோட்டம் அமைத்து பார்த்துகொண்டால் நமக்கு நேரம் போவதே தெரியாது. மேலும் குடும்ப செலவுக்கு தேவையான வருமானமும் கிடைக்கும். வேலையை தேடும்போதே இது போன்ற வேலையை அமைத்துகொண்டால் அதில் வரும் வருமானம் வேலையை தேடுவதற்கு உதவியாக இருக்கும் என்றார்.
-காளிதாஸ்