அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காகத் தேர்வு நடத்துவது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி (25.10.2023) அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த தேர்வின் மூலம் 2,222 பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ் பாடப்பிரிவில் 394 பேரும், ஆங்கில பாடப்பிரிவில் 252 பேரும், கணிதத்தில் 233 பேரும், இயற்பியல் பாடப்பிரிவில் 292 பேரும் என மொத்தம் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது மட்டுமின்றி வட்டார வள மைய கருத்தாளர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
இதனையடுத்து, ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என கடந்த 22ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. அதில், ‘விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு (Hall Ticket) ஆசிரியர் தேர்வு வாரிய இணையத்தளத்தில் (https://www.trb.tn.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் 22ஆம் தேதி முதல் அவர்களது பயனர் ஐடி (User id) மற்றும் கடவுச் சொல் (Password) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’ என்று அறிவித்திருந்தது.
இந்த நிலையில், ஜனவரி 7ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், இந்த தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ஜனவரி 7ஆம் தேதி அன்று நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய ஆசிரியர் (B.T / BRTE) தேர்வானது மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டும் தேர்வர்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டும் ஒத்தி வைக்கப்படுகிறது.
மேற்கண்ட தேர்வானது வருகின்ற பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி (04.02.2024) அன்று நடைபெறும் என விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது. 07.01.2024 அன்று நடைபெறவிருந்த மேற்கண்ட தேர்விற்கான நுழைவு சீட்டினை 04.02.2024 அன்று நடைபெறவிருக்கும் தேர்விற்கு பயன்படுத்தலாம் என விண்ணப்பதாரர்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.