மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியத் தலைநகர் டெல்லியில், பஞ்சாப் உட்பட பல மாநிலங்களில் இருந்து அங்குச் சென்ற லட்சக் கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில், விவசாயிகளுக்கான ஆதரவு போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. பிரதான எதிர்கட்சியான தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம், முற்றுகை, மறியல், தர்ணா எனப் பல கட்டப் போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்குப் பொது மக்களின் ஆதரவை தெரிவிக்கும் வகையில் 8ஆம் தேதி பொது வேலை நிறுத்தத்திற்கு (பாரத் பந்த்) அகில இந்திய விவசாயச் சங்கங்கள் அழைப்பு விடுத்தது.
இந்தப் பொது வேலை நிறுத்தத்திற்கு, நாடு முழுக்க உள்ள எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதன்படி தமிழகத்தில் தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தங்களின் ஆதரவை தெரிவித்தனர். 8ஆம் தேதி தமிழகத்தின் வழக்கமான நடைமுறை முடங்கும் அளவுக்கு, இந்த பாரத் பந்த்திற்கு மக்களிடம் ஆதரவு இருந்தது.
ஈரோடு மாவட்டத்தில் தொ.மு.ச.,ஏ.ஐ.டி.யூ.சி, சி .ஐ.டி.யு,, ஐ.என்.டி.யூ.சி உட்பட பத்துக்கும் மேற்பட்ட மத்திய தொழிற்சங்கங்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டது. அதேபோல் விவசாயச் சங்கங்கள், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, உள்ளுர் வியாபாரிகளின் நூற்றுக்கும் மேற்பட்ட சங்கங்களும் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு பங்கேற்கவும் செய்தனர்.
மாவட்டத்தில் சில இடங்களில் மட்டும் அ.தி.மு.க தொழிற்சங்கத்தினர் ஏற்பாட்டில் பேருந்துகள் இயங்கின. தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஈரோடு வ.உ.சி பூங்கா பகுதியில் செயல்பட்டு வரும் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட், இன்று இயங்கவில்லை. பொது வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நேதாஜி தினசரி மார்க்கெட் ஒருநாள் அடைக்கப்பட்டிருந்தது. எப்போதும் பரபரப்பாகக் காட்சி அளிக்கும் மார்க்கெட் பகுதி, பன்னீர்செல்வம் பார்க், ஈஸ்வரன் கோவில் வீதி, கொங்காலம்மன் வீதி, ஆர்.கே.வி ஈரோடு போன்ற இடங்கள், மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சியினர், தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோட்டில் சூரம்பட்டி நால்ரோட்டில், சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி சங்கத்தினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதைப்போல் மூலப்பட்டறை பகுதியிலும் வீரப்பன் சத்திரத்திலும், கருங்கல்பாளையம் காந்திசிலை பகுதிகளிலும் மறியல் போராட்டம் நடந்தது. விவசாயிகள் போன்று வேடமிட்டு மண்வெட்டி, நெல்நாற்றுடன் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் கோபிசெட்டிபாளையம், பவானி, அந்தியூர், மொடக்குறிச்சி, சென்னிமலை, பெருந்துறை சத்தியமங்கலம், தாளவாடி என மாவட்டம் முழுவதும் இடதுசாரி கட்சியினர் 100 இடங்களில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.