தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் மாநிலப் பேரிடர் மீட்புக் குழு தேசியப் பேரிடர் மீட்புக் குழு தீயணைப்புத்துறை, காவல்துறையினர் மற்றும் அனைத்து அரசுத் துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்தச் சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மத்திய அரசுத் துறைகள் மற்றும் பாதுகாப்புப் படைகள் மேற்கொண்டு வரும் மீட்பு நிவாரணப் பணிகளை ராஜ் பவனில் நடைபெற்ற கூட்டத்தில் ஆய்வு செய்தார். அப்போது மழை வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மத்திய அரசின் அமைப்புகளுடன் மாநில அரசுக்கு ஒருங்கிணைப்பு இல்லை எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “மழை வெள்ளம் ஏற்பட்ட முதல் நாளில் இருந்து அனைத்து துறைகளுடனும் ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறோம். மத்திய அரசின் அமைப்புகளுடன் மாநில அரசுக்கு ஒருங்கிணைப்பு இல்லை என்ற ஆளுநரின் கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. 7 டன் உணவுப் பொருட்களை ஹெலிகாப்டர் மூலம் மத்திய அரசின் அமைப்புகளுடன் மக்களுக்கு விநியோகிப்பதில் இணைந்தே செயல்பட்டோம். முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளம் பாதித்த இடங்களில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளையும், நிவாரணப் பணிகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்” எனத் தெரிவித்தார்.
அதே சமயம் தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழு ஆலோசகர் கே.பி. சிங் தலைமையில் 5 பேர் கொண்ட மத்தியக் குழு நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு உடனிருக்க வேண்டிய நிலையைக் கருத்தில் கொண்டு நாளை மறுநாள் (21.12.2023) தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார். முன்னதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை தூத்துக்குடிக்குச் செல்வதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.