தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அந்தந்த மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைள், கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளனர். மேலும், மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அவ்வப்போது மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.
குறிப்பாக, தமிழகத்தில் இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் இரவு ஊரடங்கை அமல்படுத்த நேரிடும் என்று தமிழக அரசு மக்களை எச்சரித்துள்ளது.
இந்த கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறையின் செயலாளர் தலைமையில் விரிவான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திட்டமிட்டபடி, +2 பொதுத்தேர்வு மே 3- ஆம் தேதி முதல் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. அதேபோல் +2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு வழிகாட்டுதல் வெளியான நிலையில், அதனை நடத்த பள்ளிக்கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் 9, 10- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறிவுத் தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. தேர்வு இல்லாவிட்டாலும் மாணவர்களின் திறனை அறிந்துகொள்ள திறனறிவுத் தேர்வு நடத்த அரசு முடிவு செய்துள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.
இருப்பினும் திறனறிவுத் தேர்வில் சரியாக விடை அளிக்காவிட்டால் தேர்ச்சி கிடையாது என்பது போன்ற எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
9, 10- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படாது எனத் தமிழக அரசு என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இத்தகைய தகவல் வெளியாகியுள்ளது.