திறமையான பெண்களுக்கு அதிகாரம் அளிக்காமல் கைப்பாவைகளுக்கு அதிகாரமா? மகளிர் ஆணைய நிர்வாகிகள் நியமனம் குறித்து திமுக மகளிரணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி மாநில திமுக மகளிரணி அமைப்பாளர் காயத்ரி ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரி அரசு மகளிர் ஆணைய நிர்வாகிகள் பதவிக்கு பெயரளவில் விண்ணப்பங்களை பெற்றுவிட்டு, தனக்கு ஆதரவானவர்களை ஆணைய நிர்வாகிகளாக நியமித்திருப்பது ஏற்புடையதல்ல. எத்தனை காலம் தான் பெண்களை ஏவலுக்கே கைப்பாவைகளாக வைத்திருப்பீர்கள். அதிகாரத்தில் திறமையான பெண்களை நியமிக்க மறுக்கும் ஆணாதிக்க மனத்தடைகள் அகலுவது எப்போது? என்ற கேள்வியை புதுச்சேரி பெண்கள் கேட்கத் துவங்கிவிட்டனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் ஆணைய பதவிகளில் இருந்த நிர்வாகிகளின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் புதிய நிர்வாகிகளை நியமிக்க மெத்தனம் காட்டிய புதுச்சேரி அரசை கண்டித்து ஜமுனா என்பவர் வழக்கு தொடர்ந்தார். 2 ஆண்டுகளாக தேர்வுக்குழு நியமிக்காததற்கும் நிர்வாகிகள் நியமிக்காததற்கும் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில், மகளிர் ஆணையத்தில் நிர்வாகிகளை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. மேலும் சட்டப்பணிகள் ஆணையத்துக்கு ரூ.25000 செலுத்த வேண்டுமென அபராதமும் நீதிமன்றம் விதித்தது. இந்த நிலையில் தான் ஜனவரி 25ம் தேதிக்குள் அனைத்து பதவிகளையும் நிரப்புவோம் என உத்ரவாதம் வழங்கியது புதுச்சேரி அரசு.
நேர்மையான திறமையான படித்த பெண்களை நியமித்தால் நேர்மை, நியாயம், நீதி என்று பேசி ஆட்சிக்கு நெருக்கடி கொடுப்பார்கள் எனக் கருதி தனக்கு ஆதரவாளர்களை கைப்பாவைகளாக நியமிக்க பல்வேறு முயற்சிகள் நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதற்கு உயரதிகாரிகள் சம்மதிக்காததால், கடந்த 2 ஆண்டுகளாக மகளிர் ஆணையத்திற்கு நிர்வாகிகள் நியமிக்கப்படாமல் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம், இப்பதவிக்கு மூன்று முறை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு மட்டும் முன்னர் வெளியிடப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை இந்ந நியனமனத்தில் எழுப்புகிறது.
தற்போது, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் மகளிர் ஆணைய தலைவியாக நாகஜோதி, உறுப்பினர்களாக சுஜதா, சேலியமேட்டை சேர்ந்த அன்பரசி (எஸ்சி), சந்திரா (எஸ்டி) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக கவர்னர் ஒப்புதலோடு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக மகளிர் ஆணைய நிர்வாகிகள் பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் நடத்தி, அதில் தகுதியானவர்களை நியமிப்பது வழக்கம். ஆனால் பெயரளவில் கூட விண்ணப்பத்தவர்கள் யார் யார் என்ற நேர்முகத் தேர்வு கூட நடத்தாமல் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதிக பெண் வாக்காளர்களை கொண்ட வெற்றி பெற்ற பெண் எம்எல்ஏ அமைச்சராக ஆன போதும் பாலின வேறுபாடுகள் காட்டப்படுவதாக ராஜினாமா செய்ததை நினைவு கூர்கிறேன். புதுச்சேரியில் நியமன சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் போது கூட பெண்களை புறக்கணித்தே வந்திருக்கிறார்கள். பல்வேறு துறைகளின் அதிகாரப்பதவிகளில் திறமையான பெண்களுக்கு வாய்ப்பு அளிக்க மறுக்கும் இந்த ஆணாதிக்க மனோநிலையை புதுச்சேரி அரசும், அதிகாரிகளும் விட்டொழிக்க வேண்டும். பாலின சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டிய அரசு, அதற்கு நேர் மாறாக செயல்படுகிறது.
புதுச்சேரியில் சட்டம்-ஒழுங்கு மிக மோசமாக சீர்கெட்டுள்ளது. பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் எண்ணம் ஆட்சியாளர்களுக்கு துளியும் இல்லை. பெண்களின் உரிமைக்காக செயல்பட வேண்டிய மகளிர் ஆணையத்தில் ஆட்சியாளர்கள் தங்களது ஆதரவாளர்களை நியமித்தால், அந்த அமைப்பு எப்படி நேர்மையாக செயல்படும்? பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்? குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் தவறுகளும், முறைகேடுகளுக்கும் வழி வகை செய்யும் வகையில் ஆட்சியாளர்கள் செயல்படுவது வேதனை அளிக்கிறது. மேலும், ஜன.22ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையை ஜன.27ம் தேதிக்கு பிறகே வெளியே தெரியும் வகையில் அரசிதழின் இணையதளத்தையும் ஒரு வாரத்திற்கு முடக்கி வைத்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மகளிர் ஆணையத்திற்கு நியமிக்கப்பட்ட 4 பேரில் தலைவர் உட்பட 3 பேர் பாகூரையும், ஒருவர் குருமாம்பேட்டையும் சேர்ந்தவர் ஆவர். இப்பணிக்கு ஒரே பகுதியை சேர்ந்த 3 பேர் நியமிக்கப்பட்டது ஏன்? அதேபோல், 6 உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதாக விண்ணப்பம் பெற்றுவிட்டு 4 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டது ஏன்? தேர்வுக்குழுவின் வெளிப்படைத்தன்மை என இந்த மகளிர் ஆணைய தேர்வில் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
சில மாதங்களுக்கு முன் குழந்தைகள் நல ஆணையத்தில் பல்வேறு முறைகேடுகள் குற்றச்சாட்டுகள் காரணமாக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தார்கள். புதிய நிர்வாகிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட பிறகும் நேர்மையானவர்களை நியமிக்காமல் ஆட்சியாளர்களின் ஆதரவாளர்களை நியமிக்க காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் குழந்தைகள் நலக்குழுவுக்கும் தகுதியும், திறமையும் இல்லாத அரசியல் செல்வாக்கு உள்ளவர்களையே நியமிக்க நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
புதுச்சேரியில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க உள்ளூர் புகார் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இக்குழு அதிகாரமில்லாத குழுவாகவே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 10க்கும் குறைவான பெண் ஊழியர்கள் பணிபுரியும் இடங்களில் ஏதேனும் பாலியல்ரீதியாக பிரச்னை ஏற்பட்டால், அதுகுறித்து புகார் அளித்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்க புதுச்சேரி மாவட்ட அளவிலான புகார் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் ஆட்சியாளர்களின் செல்வாக்கும், ஆதரவும் உள்ளவர்களையும், சர்ச்சையில் சிக்கிய நபர்களையும் நிர்வாகிகளாக நியமித்துள்ளது வேதனைக்குரியது.
திறமையான பெண்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த துறைகளில் அதிகாரம் அளிக்காமல் மறுதளிக்கும் ஆட்சியாளர்களுக்கு திமுக மகளிரணி கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறது. இந்த புதிதாக நியமிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய குழுவை கலைத்துவிட்டு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால், புதுச்சேரியில் பெண்கள், குழந்தைகள் நலன் சார்ந்து உழைக்கும் அனைவரையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.