



தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான (பொறுப்பு) டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (20/06/2021) மரியாதை நிமித்தமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, சென்னை ஆழ்வார்பேட்டை, சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், "சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் முதல் முறையாக தமிழகம் வந்துள்ளதால் மரியாதை நிமித்தமாக முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். மேலும், கோதாவரி நதி நீர்த்திட்டம், புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம் பற்றியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பேசினேன். புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம், மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்த உதவியாக இருக்கும். அது தமிழகத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கரோனா தொற்று குறைந்துள்ளது ஆறுதலைத் தருகிறது" எனத் தெரிவித்தார்.